Thursday, 19 December 2013

“லண்டனில் சிலுவைராஜ்“ – பயணக் கட்டுரை


பயணக்கட்டுரை என்பதாலோ என்னவோ, வழக்கமான நடையில் அங்க போனேன்... அதப் பாத்தேன்.. இங்க போனேன். இதப் பாத்தேன்னு நிறைய வரலாறும் கொஞ்சம் சொந்த அனுபவமும் இருக்கு.
தமிழ்நாட்டுலருந்து தன் மகள் மருமகனைப் பார்க்கப்போகும் தம்பதிகள்.. தந்தையான சிலுவைராஜின் பார்வையிலிருந்து லண்டன் மாநகரத்தைப் பற்றி வரையறுக்கும் புத்தகம் இது. ஆங்காங்கே நம் கலாச்சாரம், மக்கள், உணவு போன்றவற்றுடன் லண்டனை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள்.
எந்தப் புத்தகத்தையும் வரிவிடாம படிச்சிடுவேன். ஆனா இதுல, பாதி வரைக்கும் படிச்சேன். முழுசாப் படிக்க மனசும் பொறுமையும் வரமாட்டீங்குது. கடைசி இரண்டு பக்கத்துக்கு தாவிட்டேன். அதாவது ஐம்பது நாள் லண்டனில் கழித்துவிட்டு, மறுபடியும் நம்ம ஊருக்கு வந்து அப்பாடானு ஐக்கியமாகுற முடிவு எப்படியிருக்கும்னு படிச்சுட்டு, மூடி வச்சுட்டேன்.
 புத்தகம் முழுக்க லண்டன் பற்றிய வர்ணிப்பும் அங்கலாய்ப்பும் நிறைந்திருக்கிறது. ஒரு சில நாம் அறியாத புதிய தகவல்களும் உள்ளடங்கியிருக்கு. சில இடங்கள்ல அவங்களை உயர்த்தி நம்மளை மட்டம் தட்டுறார். சில இடங்களில் தலைகீழாய்..!
ஒருவேளை, நான் லண்டன் போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டா படிச்சுக்கலாம்னு விட்டுட்டேன். (தமிழ்நாட்லயே இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கு.. ம்கும்.)
வெளிநாட்டு மோகம் இருப்பவர்களும், பயணக்கட்டுரையில் ஆர்வம் உள்ளவர்களும் தாராளமாய் படிக்கலாம். (மத்தபடி, பொறுமையில்லாதவங்க படிச்சுட்டு என்னைய திட்டாதீங்க..).
 லண்டனில் சிலுவைராஜ்“ - பயணக்கட்டுரை
ராஜ்கௌதமன்
(தமிழினி)

.

Friday, 13 December 2013

கையாலாகாதவர்கள்..!

“உனக்கென்ன.. அரசாங்க அலுவலகத்துல வேலை. போய்ட்டு வர்றதுக்கு ஸ்டாஃப் பஸ் வேற. 9 மணியிலிருந்து 5 மணிவரைக்கும் கம்யூட்டர் முன்னாடி உக்காந்து ஒப்பேத்திக்கிட்டு கிளம்புவ. குடுத்துவச்ச மகராசி..“
நிறையபேர் அடிக்கடி இப்படி சொல்வதை கவனிச்சிருக்கேன். அரசாங்க அலுவலகம் என்றாலே ஏதோ வெட்டிப்பொழுது போக்கிட்டு பொழுதைக் கழிப்பவர்களென பொதுவான கருத்து இருக்கு. அங்கேயும் மாங்கு மாங்குனு வேலை பாத்துகிட்டு, சிடுசிடுக்கும் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்லிகிட்டு நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
தற்காலிகப் பணியாளர்கள்னு ஒரு வகை அரசாங்கத்துல இருக்குங்குறது பரவலா வெளியிலருந்து பாக்குற யாருக்கும் தெரியிறது இல்ல. அதாவது கம்மியான சம்பளத்துலயோ அல்லது தினக்கூலி அடிப்படையிலயோ ஆயிரக்கணக்கான நபர்கள் வேலை பாக்குறாங்க. அதிகபட்சமாய் மூவாயிரம் கூட சம்பளம் வாங்க இயலாத இவர்கள், நாட்கள், மாதங்கள் என்பதைக் கடந்து, பல வருடங்களாய் தங்கள் பணி நிரந்தரமாகுமென கனவு கண்டுகொண்டு இருக்கிறார்கள். இதில் சாதாரண துப்புறவு தொழிலாளர்ல ஆரம்பிச்சு, டிரைவர், ப்ளம்பர், கார்பென்டர், பியூன்.. என பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
(எனக்குத் தெரிந்து சில அரசாங்க அலுவலகத்தில்) பணி நிரந்தரமாக, குறைந்தபட்சம் ஐந்து வருடங்கள் பூர்த்தியாக வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், என் தோழி ஒருவருக்கு 17 வருடங்கள் கழித்தே அரசாங்கத்தில் பணி நிரந்தரமாகியிருக்கிறது. “இதுக்கு முக்கியமான காரணம் பணம் தான். முன்னாடியெல்லாம் யார் பணம் குடுத்து வேலைக்கு முயற்சி பண்றாங்கனு இருந்துச்சு. இப்ப யார் அதிகம் குடுத்து முயற்சி பண்றாங்கனு மாறிடுச்சு“ என்று வருத்தமாய் அவர் கூறக் கேட்டிருக்கிறேன்.
அதிலும், அலுவலகத்தில் மற்ற ஊழியாகள் மத்தியில் தற்காலிக பணியாளர்களுக்கு எந்த அளவு மரியாதை கிடைக்கும் என்பது கேள்விக்குறியே..!
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை பணி தொடர்பான கோரிக்கைகளும் விண்ணப்பங்களும் அறிவிக்கப்பட்டு, தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பது நடைமுறை. உள்ளிருக்கும் தற்காலிகப் பணியாளர்களுக்கு அதில் முன்னுரிமை வழங்கப்படும். அனுபவம், படிப்பு அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுவார்கள். ஆனால் இன்றைய சூழ்நிலையில், அவர்களுக்குள்ளும் வசதி படைத்தவர்கள் எனும் ஒரு வகையிருக்கிறது.. அதில் சீனியர் ஜீனியர், படிப்பு எல்லாமே அடிபட்டுப்போய்விடுகிறது.
இவர்கள் அல்லாமல், சம்பந்தமே இல்லாமல் வெளியிலிருந்து யாராவது சிபாரிசு என்ற பெயரில் வருவதுமுண்டு. இதில் கடைசி ஆயுதமாய் சிலர் தங்கள் ஜாதிகளையும் உபயோகிக்கிக்கலாம். தங்கள் ஜாதிப் பயலுகளைத் தான் வேலைக்கு சிபாரிசு செய்வேன் என்கிற தரமான மனிதர்களும் இருக்கிறார்கள். இப்பெருங்கூட்டத்தில் நேர்மையாய் உண்மையாய் யாரேனும் அதிகாரிகள் இருந்தாலும் மற்றவர்களின் ஆதிக்கத்தில், ஏதும் செய்ய இயலாது ஒதுங்கிக்கொள்கிறார்கள்.
எப்போதாவது போனால் போகிறதென இரக்கப்பட்டு, இருபது, பதினைந்து, பத்து வருடங்கள் வேலை பார்த்தவங்களை அப்படியே, அதே பணியில் நிரந்தரமாக்க மேலிடத்திலிருந்து ஆணை வரலாம். அதிகபட்சமாய் அவர்களுக்குரிய சம்பளமாக நிர்ணயிக்கப்படுவது வெறும் 6000 ரூபாயே. உள்ளிருக்கும் படிக்காதவர்கள் அல்லது பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்தவர்களுக்கு இது தவிர வேறு போக்கிடம் இருப்பதில்லை.
பட்டப்படிப்பு மற்றும் பிற தொழில்நுட்பப் படிப்புகள் கையிலிருக்கையில், தேவையான வருடங்கள் முடிந்தபின்னும் (சீனியாரிட்டி போய்விடுமென்கிற கவலையில்) வெளியேயும் போக முடியாமல், பொருளாதார சிக்கலில் உள்ளேயும் இருக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பதை கண்கூடாய் பார்க்கலாம். நண்பர் ஒருவர் பன்னிரெண்டாண்டு காலம் தற்காலிகப் பணியிலிருந்து,  விரக்தியில் ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.
“தனியார் அலுவலகத்துக்கு போயிருந்தா இந்நேரம் கைநிறைய வாங்கியிருக்கலாம். பேசாம இந்த வேலையை விட்டுட்டு வெளில வந்துடுங்க“ என்று பல குடும்பத்தில் தினமும் பாடம் நடக்கும். அடுத்த மாசம் வந்துடும்.. இன்னும் மூணே மாசம் தான்..னு சொல்லிச் சொல்லியே தங்களைத் தாங்களே வேறுவழியின்றி ஏமாற்றிக்கொள்கிறார்கள். அரசாங்கத்தில் தற்காலிகப் பணியாளர்களாய் இருப்பது கிட்டத்தட்ட புலிவாலைப் பிடித்த கதைதான்.
வருடத்திற்கு ஓய்வு பெறும் நபர்களைக் கணக்கில் கொண்டு, பதிலாக இவர்களை நிர்ணயித்தாலே உள்ளிருக்கும் பணியாளர்களை ஓரளவுக்காவது திருப்திப்படுத்திடலாம். சொந்தக்காரன், ஜாதிக்காரன், பணம் அதிகமாய் கொடுப்பவன்.. என ஆளாளுக்கு வைத்திருக்கும் பட்டியல்களில், வேலைக்கான தகுதியை மட்டுமே வைத்திருக்கும் நிறைய ஊழியர்களின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.
கேவலம் பணம் தான் வாழ்க்கையைத் தீர்மானிக்குது.
.
.

Friday, 29 November 2013

Life is Beautiful - என் பார்வையில்..!


முன்வழுக்கை, ஒட்டிய கன்னங்கள், சற்றே குள்ளமாய் ஒடிசலான உருவம்.. இதுவே Life is Beautiful படத்தின் நாயகன் Roberto Benigniயின் தோற்றம். சராசரிக் கதாநாயகனுக்குரிய எந்தவிதமான ஹீரோயிசமுமின்றி படம்முழுக்க நம் மனதில் நிறைந்து நிற்கிறார். ஆரம்பித்த முதல் நிமிடத்திலிருந்து இவர் முகத்திலிருக்கும் புன்னகை, இறுதிவரை சற்றும் குறையாமல் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. (படத்தினை எழுதி இயக்கியவரும் இவரே..!).

வாழ்க்கையை, எந்த சூழலிலும் பாஸிடிவ்வாக எதிர்கொள்ள வேண்டும் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறது திரைப்படம். காதலன், கணவன், தகப்பன் என முப்பரிணாமத்தையும் அழகாய் வெளிப்படுத்தியிருக்கும் இயக்குநருக்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

ஒரு காட்சியில், இசைநாடகம் நடந்துகொண்டிருக்கும் அரங்கத்தில் பால்கனியிலிருக்கும் காதலியை, கீழிருந்து திரும்பிப் பார்த்துக்கொண்டிருப்பார் ஹீரோ. அப்போது, நாயகனுக்கு பக்கத்து இருக்கைப் பெண் இவரை முறைத்ததும், எனக்கு வலதுபக்க காது தான் கேட்கும். அதனால் அவ்வாறு திரும்பி உட்கார்ந்திருப்பதாக கூறி சமாளிப்பார். ஹய்ய்ய்யோ... செம சீன் அது.

இருவரும் காதல் வயப்படும்போது, நாயகியின் நிச்சயதார்த்த விழா என்று கூட யோசிக்காமல், சாப்பாட்டு டைனிங் டேபிளின் அடியில் இருவரும் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி அழகான கவிதை.

இரண்டாம் உலகப்போருக்கான காலகட்டத்தில் படம் நகர்கிறது. காதலித்த பெண்ணையே மணந்து, மனைவி, மகனுடன் சந்தோசமாய் வாழ்ந்துகொண்டிருக்கும்போது, யூதர்களுக்கான கைதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் அனைவரும். மனைவி பெண்கள் முகாமிலும், மகனுடன் (அருகிலேயே) ஆண்களுக்கான முகாமிலும் கைதிகளோடு கைதிகளாய் அடைக்கப்படுகின்றனர். அந்த சூழ்நிலையிலும், ஒரு தகப்பனாக தன் மகனுக்கு தைரியமூட்டும் வகையில், நடப்பதனைத்தும் விளையாட்டு எனவும், அதில் ஜெயிப்பவர்களுக்கு பரிசுகள் வழங்குவார்களெனவும், ஒவ்வொரு சம்பவங்களையும் விளையாட்டாய், குழந்தைகள் பாஷையில் புரியவைப்பது ரசனை..!

சிறுவன் Giorgio Cantarini, தந்தையின் ஒவ்வொரு விளக்கத்திற்கும் வெளிப்படுத்தும் முகபாவனைகள் அழகோ அழகு. ஒரு காட்சியில் முகாமின் அதிகாரி, ஜெர்மன் மொழியில் சிறையின் விதிமுறைகளை கூறும்போது, அதை Roberto Benigni மொழிபெயர்ப்பார். அதிகாரியின் சைகையின்படியே, விளையாட்டின் விதிமுறைகளாக, குழந்தைகள் அழக் கூடாது“, “ஜெயிப்பவர்களுக்கு நிஜமான Tank பரிசாக வழங்கப்படும்முதலியவற்றை பதறாமல் கூறுகையில், சிறுவனுடன் சேர்ந்து நாமும் கவனித்துக்கொண்டிருப்போம்.

முகாமில் நடக்கும் சர்வாதிகாரம், கொடுமைகள், கொலைகள் அனைத்தையும் தாண்டி, தந்தை-மகனுக்கான உறவினை ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கிறார் இயக்குநர். சிறையில் தன் மனைவியை ரகசியமாய்ப் பார்க்க வந்து, பின் காவலனிடம் சிக்கி, கொல்வதற்காக அழைத்துச்செல்லப்படும் நிமிடத்தில்கூட, சிரித்துக்கொண்டே வீரநடை போடுவது மனதினை அழுந்தச் செய்கிறது. முடிவில், அவர் இறந்துவிடுவதை நம்பமுடியாமல், மீண்டும் ஏதேனுமொரு காட்சியில் தோன்றிடுவாரோ என கடைசிவரை தேடிக்கொண்டிருந்தேன்.

இறுதிக்காட்சியில், சிறுவன் வெளியே வருகையில் Tank ஒன்றின்மீது போர்வீரன் ஏறிவருவதைப் பார்த்து, தந்தை கூறியபடியே தனக்கு பரிசு கிடைத்துவிட்டதாய் சந்தோசமாய் கூச்சலிடும்போது, நம்மையும் அறியாமல் நிம்மதிப்பெருமூச்சு உண்டாகிறது.

முற்பாதியில் வரும் பெரும்பாலான நகைச்சுவை காட்சிகளை யூத் படத்தில் காப்பியடிக்காமல் இருந்திருக்கலாம். ஹூம்ம்..

பிரச்சனைகளால் மனம் தளர்பவர்களுக்கு நிச்சயம் Life is Beautiful ஒரு உற்சாக டானிக் தான்.

.
Related Posts Plugin for WordPress, Blogger...