Thursday, 29 November 2012

சுஜாதாவின் “மீண்டும் ஜீனோ“ – என் பார்வையில்..
“என் இனிய இயந்திரா“ 1986லேயே எழுதப்பட்டிருந்தாலும் இன்றை சூழலுக்கான டெக்னாலஜி பற்றி குறிப்பிட்டிருந்தது அதிஅற்புதமான விஷயம். அதைத்தொடர்ந்து இந்தக் கதையிலும் டெக்னாலஜியின் ஆக்கிரமிப்புகள் அதிகம். ஜீனோ என்ற ரோபாட் நாயைப் பற்றிய கதையமைப்பு என்பதாலோ என்னவோ, சுற்றிச்சுற்றி ஹார்டுவேர்.. சாஃப்ட்வேர் பற்றிய வார்த்தைகளாகவே சுழன்று நம்மை மூச்சுத்திணற வைத்திருக்கிறார் எழுத்தாளர்.
நடுவில் ஒரு பத்து பக்கங்களை அடல்ட்ஸ் ஒன்லி ஆக்கினாற்போல தோன்றியது. கதாநாயகி சிபி, நிலா, காமா மூவருக்கும் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கும் மருந்தைக் கொடுத்து உடலுறவு மூலம் சூழ்ச்சியில் ஆழ்த்துவது தொடர்பான அத்தியாயம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா டோஸ்.
ஜீனோ என்ற ஒரு மடிநாய் பலமடங்கு புத்திசாலி என்பதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனா அந்த அளவிற்கு பலசாலியாய் (வரிசையாய் எதிரிகளை நொடிப்பொழுதில் கடித்து, பற்களின் மூலம் விஷம் செலுத்திக் கொன்று விடுவது போல) வடிவமைத்திருப்பது கொஞ்சம் மிகையே.
சுவற்றில் அந்த நாயை வீசி எறியும்போது, எதிர்விசை பயன்படுத்தி மிருதுவாய் மோதும் வித்தையை ப்ரயோகிப்பது ரசிப்பிற்குரியது. ஆன்டி லேசர் வைத்திருப்பது, டேட்டா பேஸை அலசி ஆராய்வது, டிஸ்க்கில் அலாதியான மெமரி.. என ஜீனோவை ஒரு சூப்பர்மேன்... ஸாரி.. சூப்பர்டாக் போல உருவமைத்திருக்கிறார் சுஜாதா. பறக்கும் சக்தி ஒன்று தான் மிஸ்ஸிங்.
முடிவிற்கு சற்றுமுன், திடீரென புரட்சிப் படை உருவாவதும், டாக்டர் ரா மற்றும் உதவி இருவர் மூலம் அது வளருவதும், அவ்வப்போது விவி திரையில் உரையாடல்களும்.. என கொட்டாவி வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
கடைசியில் வில்லன்களில் ஒருவன் தப்பியோடியபின், இயந்திரங்களுக்கே உரிய இயந்திரக்கோளாறு காரணமாக ஜீனோ ஸ்தம்பித்துப்போவதும், பின் மியூசியத்தில் காட்சிப்பொருளாய் நின்றுவிடுவதும் வழக்கமான எண்டிங்.
“என் இனிய இயந்திரா“வில் புத்தகங்கள் பற்றிய நிறைய தகவலை ஜீனோ பகிர்ந்திருக்கும். ஆனால் “மீண்டும் ஜீனோ“வில் புத்தகங்களின் தலைப்பு மட்டும்.. அதுவும் அரிதாக சொல்லுகிறது.
“மீண்டும் ஜீனோ“ சிறப்பான கற்பனை, ஆனாலும் “என் இனிய இயந்திரா“ அளவிற்குப் பாராட்ட முடியவில்லை.
.
.

Tuesday, 27 November 2012

சிகரம் – என் பார்வையில்..

நான் இதுவரைக்கும் விமர்சனம்னு எழுதினது இல்ல. இதுவும் விமர்சனம் இல்ல. ரொம்ப நாளைக்குப் பிறகு நேத்து ராஜ் டிஜிடலில் “சிகரம்“ படம் பார்த்தேன். எத்தனை முறை பார்த்தாலும் மீண்டுமொரு முறை பார்க்கத்தூண்டும் படங்களில் இதுவும் ஒன்று. எதனாலோ அது பற்றி பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு.
சிகரம் - காதல், நட்பு, கணவன் மனைவி அந்நியோன்யம், நம்பிக்கை, இழப்பு, யதார்த்தம்னு எல்லாம் கலந்த கவலையா இந்தப் படத்தைச் சொல்லலாம்.
ரேகா, ஆனந்த் பாபு, ரம்யா கிருஷ்ணன், நிழல்கள் ரவினு மற்ற கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் மனசுல நிக்கிறது என்னவோ, ராதா - எஸ்பிபி இந்த இருவருக்குமிடையேயான நட்பு ரீதியான காதல் தான்.
இதில் எனக்குப் பிடித்த காட்சிகளெனில், தான் காதலித்த பெண்ணை பல வருடங்கழித்து தனக்கான மருத்துவராக சந்தித்து, பின் நட்பு கொண்டு, பழைய நினைவுகள் பற்றிய எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ளும் காட்சிகள். குறிப்பா..
“நா இல்லாம நீங்க இல்ல.. நீங்க இல்லாம நா இல்லனெல்லாம் பேசினோம். ஆனா இப்ப.. நா இல்லாம நீங்க இருக்கீங்க. அது மாதரி நானும் இருக்கேன். சொல்லப்போனா இன்னும் ஹெல்த்தியாவே இருக்கேன். வெய்ட் வேற ஜாஸ்த்தியாகிட்டே போகுது..“
என்று சிரித்துக்கொண்டே சொல்வது மிகவும் யதார்த்தம்.
“நா உன்னை நோகடிச்சுட்டேன்.. அழிச்சுட்டேன்“னு எஸ்பிபி சொன்னதும் “தப்பா சொல்றீங்க. நா இன்னும் அழியல“னு ராதா சொல்றதும் அருமையான காட்சி. அந்த நிதானம் ரசிப்புக்குரியது.
பக்குவப்பட்ட ஒரு காதலை, முதிர்ச்சியடைந்த ஒரு நட்பை அதுல பார்க்கமுடியும்.
அதே சமயம், ரம்யா கிருஷணன், ஆனந்த் பாபுவுக்கு இடையேயான காதலைப் புரிந்துகொள்வதற்கு, கொஞ்சம் கடினமாக இருக்கலாம். கலாச்சார சீரழவுனு பலருக்குத் தோணலாம். அது பிறரின் புரிதல்களைப் பொறுத்தது.

“உங்கள் நண்பர்களைச் சொல்லுங்கள்
நீங்கள் யாரென்று சொல்லுகிறேன்
என்றார் ஒரு பேரறிஞர்..
நான் சொன்னேன்
நீங்கள் யாரென்று சொல்லுங்கள்
உங்கள் நண்பர்களைச் சொல்லுகிறேன்..
நீங்கள் யாரானால் என்ன
நான் யாரானால் என்ன
அனாவசியக் கேள்விகள்
அனாவசிய பதில்கள்
எதையும் நிரூபிக்காமல்
சற்று சும்மா இருங்கள். “ங்குற ஆத்மா நாம் வரிகளை ராதா சொல்லும் காட்சியில், அதை ரசிக்காம இருக்க முடியாது.

அனாவசியக் கேள்விகளும் அனாவசிய பதில்களும் நம்மையும் பலநேரம் குழப்பிக்கொண்டிருப்பது வாஸ்தவம் தானே..!

ரசனைக்குரிய திரைப்படம்.
.

Thursday, 15 November 2012

முகமறியாதவன்..!!
அது நீங்களாக இருக்கலாம்..
சில சமயம் நானாகக் கூட..!
ஒரு முறை சாலையில்..
சில முறை பயணத்தில்..
வேறொரு முறை மருத்துவமனையில்..
பிரிதொரு முறை எங்கோவென
அவனைக் கடந்து சென்றிருக்கலாம்..!!

வற்றிப்போன கண்களும்
வரண்டுபோன இதயமுமாய்
வெறுமையான நினைவலைகளுடன்
எதையோ தேடிக்கொண்டிருப்பவனாய்
நம் அருகிலேயே அமர்ந்திருக்கலாம்..!
அழுகைகளும் அவமானங்களும்
உள்ளுக்குள் அரித்துக்கொண்டிருக்க,
வெளிக்காட்டாதவனாய் எதிர் வந்துகொண்டிருக்கலாம்..!

நேசிப்பின் இழப்பை சந்தித்தவனாய்..
நட்பின் துரோகத்தில் மூழ்கியவனாய்..
உறவின் பிரிவை ஏற்றுக்கொண்டவனாய்..
வாழ்வின் கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருப்பவனாய்..
எல்லாம் மறைத்து நம்முடன் பேசிக்கொண்டிருக்கலாம்..!!

“எனக்கு மட்டும் ஏன் இப்படி“ என்று
சலித்துக்கொள்ளும் நம்மைப் பார்த்து
உள்ளுக்குள் புன்முறுவல் புரிந்தவனாய்..
முகமறியாதவனாய்.. முகவரி தொலைத்தவனாய்..
நம்முடனே இருக்கக்கூடும்.. நமக்குத் தெரியாமலேயே!!
.
.

Friday, 2 November 2012

உனக்கான தேடல் – எனக்கான தொலைதல்..


எவ்வளவு வெறுத்தாலும்
எள்ளளவும் விலகுவதில்லை..
உனக்கான என் பிரியங்கள்..!
.


மூன்று வார்த்தைகளுக்குள்
முழு நேசத்தை அடக்கிடலாமெனில்
எனக்கு மௌனமே போதுமானது..
.


எல்லாவற்றின் ஆரம்பங்களும்
உன் நினைவில் முடிவடைய,
முடிவற்ற ஆரம்பமாய் நீ மட்டும்..!!
.


உனக்கான தேடலில்
ஊர்ஜிதப்படுத்துகிறேன் என் தொலைதலை..!
.


பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்
பிரக்ஞைகள் இல்லாத பிரியங்களும்
ப்ரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்
பழக்கமாய்ப் பக்கம்வர,
வலிக்காதொரு வலி மட்டும்
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது!!
.
Related Posts Plugin for WordPress, Blogger...