Monday, 29 October 2012

நான்.. பெயரற்றவள்!!
“சனியனே.. நேரமாகுது எழுந்திரிடீ“
அம்மாவின் சுப்ரபாதத்தை ஏந்தியபடி சோம்பலாய் கண்திறந்து, சாம்பலும் பற்களுமாய் ஆரம்பித்தேன் என் நாளை! சில்லென்ற நீரிலொரு காக்கா குளியலிட்டு, ஒட்டுப்போட்ட பாவாடை சட்டையுமாய் தேநீரென்ற பெயரில் குடித்தேன் ஒரு திரவத்தை..!
அவசரமாய்  தலைவாரிப் பொட்டு வைத்து, பழைய கஞ்சியை டப்பாவிலும் வாயிலும் அடைத்தபடி, ஓட்டமும் நடையுமாய் இடம்பெயர்ந்தேன் தொழிற்சாலைக்கு. மேனேஜருக்கு வணக்கத்தையும் மேற்பார்வையாளனுக்கு சல்யூட்டையும் காணிக்கையாக்கி பெருமூச்சுடன் ஆரம்பித்தேன் எனக்கான கடமையை..
கட்டளையிடாத குறையாய் கைகள் பரபரக்க, நக இடுக்கில் கூட புகையிலைகளாய்..!!
ஒவ்வொன்றாய் நெம்பி, நிரப்பி, அடக்கி அடுக்கி கட்டுக்களாக்கி நிமிர்ந்தபோது மணியடிக்கவே, ஆளுக்கொரு பக்கமாய் அவரவர் கஞ்சியை எடுத்துக்கிளம்பினர்.. அறைகுறையாய் கைகழுவி, முதற்கவளைக்கு வாய்திறந்தேன்..
உச்சந்தலையில் “நங்“கென்றொரு கொட்டு விழுகவே அலறியடித்துக்கொண்டு எழுந்தேன்...
கட்டுக்களின் அளவுகள் மாறுபடுகிறதென அறை விழுந்தது!
ஏதேதோ கெட்ட வார்த்தைகள் எனைப்பார்த்துச் சிதறவிட்டு எல்லோரும் வேடிக்கை பார்க்க எட்டிமிதித்தான் எடுபிடியாளன்..
“ஆ“வெனக் கத்தியபடி சுருண்டுவிழுந்தேன்!!
யாரோ தண்ணீர் கொடுத்து உதவவே, விசும்பியபடி அடுக்கத்துவங்கினேன் மீண்டுமொருமுறை கற்றுக்களை..
அன்றைக்கான எண்ணிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பெட்டியிலடைக்க, ஒருவழியாய் முடித்தெழுந்து கூலிக்குக் கையேந்தி, வேலை சரியில்லையென்ற திட்டுக்களோடு தூக்கியெறியப்பட்ட ரூபாய்களைப் பொறுக்கிக்கொண்டு வெளியே நடந்தேன்.
தளர்ந்த நடையுடன் தள்ளாடியபடி, வாசலில் நின்ற அம்மாவிடம் கூலியைக் கொடுத்துவிட்டு கழிவறைக்கு ஓடினேன். காலையிலிருந்து அடக்கிவைத்த சிறுநீர் வேகமாய் வெளியேற, தூரத்தில் யாரோ ஒரு சிறுமி படித்துக்கொண்டிருக்கும் சப்தம் கேட்டது.
.
.

Tuesday, 16 October 2012

தூக்கம் – ஒரு பார்வைஇப்போதைக்கு இருக்கும் சூழலைப் பார்த்தால், இருபத்திநான்குமணிநேர மின்வெட்டை அமுல்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. இந்த இம்சைக்கு நடுவே தூக்கம் என்பதே கஷ்டமான விஷயமாய்டுச்சு. நம்மகிட்ட யாராவது வந்து, “நல்லாத் தூங்கினேன்“னு சொன்னா, நாம சொன்னவனை பொறாமையாகப் பார்க்கிறோம். அந்த தூக்கத்தைப் பற்றி, நான் படித்த ஒரு சில தகவல்களை இங்கே பகிர்ந்துக்குறேன்.
சாதாரணமாய் தூக்கம் இரண்டு வகைப்படும். ஒன்று டீப் ஸ்லீப் (Deep Sleep)  எனப்படும் Orthodox Sleep.  மற்றொன்று (Dreaming Sleep) ட்ரீமிங் ஸ்லீப் எனப்படும் பாரடாக்ஸியல் ஸ்லீப் (Paradoxial Sleep).
இந்த பாரடாக்ஸ் எனப்படும் நிலையில், உள்மனம் அரைகுறை விழிப்பு நிலையில் இருக்கும். கண் மூடி இருந்தாலும், உள்ளுக்குள் அங்கும் இங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கும். இதைத்தான் REP (Rapid eye movement)  என்பார்கள். ஆர்தடாக்ஸ் தூக்கம் NREP (Non rapid eye movement) எனப்படும்.
நமது மொத்த தூக்கத்தில் 20 சதவிகித்த்தை பாரடாக்ஸ் ஸ்லீப்பும் 80 சதவிகித தூக்கத்தை ஆர்தடாக்ஸும் பங்கு போட்டுக் கொள்கின்றன.
தூக்க நிலையில் இரண்டும் மாறி மாறி வருகின்றன. தூக்க நேரத்தில் நாலாவது சர்க்கிள் ஆர்தடாக்ஸ் ஸ்லீப் வரும் போது, சட்டென்று எழுந்திருக்க முடியா நிலையில் உடல் உறுப்புகள் அசைவுகள் கட்டுப்பட்டு இருக்கும்.
நம் இந்திய நேரப்படி ஆர்தடாக்ஸ் ஸ்லீப் எனப்படுவது விடியற்காலை நான்கிலிருந்து ஐந்து. இந்த நேரத்தில் தான் திருடர்கள் அதீத விழிப்பு நிலையில் அகப்பட்டதை சுருட்டுகிறார்கள்.
உடம்பின் தசை நார்கள் நன்கு ரிலாக்ஸாவது பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் தான். பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் கண் பாப்பா மட்டும் லெஃப்ட் ரைட் போடுவதில்லை. உடம்பின் சில உறுப்புகளும், ஏன் பல உறுப்புகளும் அசையும். பாரடாக்ஸியல் ஸ்லீப்பில் இருக்கும் பூனைகள் வால்களை ஆட்டிக் கொண்டே இருக்குமாம். இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு, மூளையின் வேகத்துடிப்பு எல்லாம் இந்த பாரடாக்ஸியல் நிலையில் தான் ஏற்படும்.
இரண்டு தூக்க நிலைகளுமே மனிதனுக்கு அவசியம் தான். பாரடாக்ஸியல் தூக்கம் வரவில்லை, கனவுகள் வருவதில்லை என்றெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இரண்டுமே நார்மலான தூக்க நிலைதான்.
இந்த பாரடாக்ஸியல் ஸ்லீப் நிலையில்தான் பெரியவர்கள் இருப்பார்கள். வயது ஏற ஏற வயதானவர்களின் மூளையின் செயல்வேகம் அதிக வேகத்துடன் விழிப்பு நிலையிலேயே இருக்கும். எழுபது வயதைத் தாண்டினாலே ஆர்தடாக்ஸ் ஸ்லீப் அவுட்தான்.
இரவில் மயக்க நிலையில் எதிரே வருபவர் முகம் கூட தெரியாத நிலையில் தூக்கத்தில் நடப்பதும் இவர்கள்தாம். மூளைக்கு உள்ளே பதுங்கியிருக்கும் ஆர்கனஸைர் முந்தைய நாளின் புரோக்ராம்களை நினைவில் உசுப்பி விட்டுக் கொண்டே இருக்கும். இதனால் குழப்ப சிந்தனையுடன் நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.
உங்கள் வீட்டில் இப்படி முதிய ஆசாமிகள் இருந்தால் தகுந்த மருத்துவரிடம் அழைத்துப் போய் சிகிச்சை பெற்று வாருங்கள். நீங்களாக மானாவாரியாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் தூக்கமாத்திரைகளை வாங்கித் தராதீர்கள். அது விபரீத பின்னடைவுகளை விளைவிக்கும்.
.
(சுப்ரஜா எழுதிய “எதிர்பாராதது“ புத்தகத்தில் படித்தது)
.
.

Thursday, 11 October 2012

எங்க ஆபீசர் அறிவாளியாக்கும்ம்ம்..அலுவலகத்துல நிரந்தரப்பணியாளர்களோட அடிப்படை சம்பளம், இன்க்ரிமென்ட், DA, HRA எல்லாத்தையும் விவரமா டைப் பண்ணி, சமீபத்துல இன்க்ரிமெண்ட் வாங்கின தொகையையும் சேர்த்து, ரிப்போர்ட் அனுப்பசொல்லியிருந்தாங்க. Wordல டைப் பண்ணினா கால்குலேசன் பண்றதுக்கு கஷ்டமாயிருக்கும்னு நா அதையெல்லாம் Excelல டைப் பண்ணேன். கூட்டல் மற்றும் சதவிகிதக் கணக்கையெல்லாம் ஃபார்முலா உபயோகிச்சு ஒரு மணிநேரத்துல முடிச்சுட்டு ஆபீசர்கிட்ட சொன்னேன். சரிபார்க்குறேன்னு வாங்கிப்பார்த்தவர், கால்குலேட்டரை எடுத்து ஒவ்வொண்ணா கணக்குப்போட ஆரம்பிச்சாரு. அப்பவே எனக்குத் தெரிஞ்சுபோச்சு, இன்னைக்குப் பொழுது இதுக்கே சரியாய்டும்னு.
Excelல தான் போட்ருக்கேன் சார். ஃபார்முலா உபயோகிச்சுத் தான் பண்ணேன்னு சொன்னாலும் அவரு கேக்கல. கிட்டத்தட்ட இருநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள்.. ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா சதவிகிதம், கூட்டல் தொகைனு கணக்குப்போட்டு மொத்தம் பார்த்தா, என்னோட ரிப்போட்டுக்கும் கால்குலேட்டர்ல வந்த பதிலுக்கும் வித்தியாசம் வந்துச்சு. ஆபீசர் என்னைய முறைச்சுப்பார்த்துட்டு, ஏதோ தப்பாயிருக்கு இந்திரா.. சரி பண்ணிட்டு வாங்கனு சொன்னார்.
சரினு சொல்லி, எல்லா ஃபார்முலாவையும் திரும்ப சரிபார்த்தேன். சரியாதான் செய்திருந்தேன். இத சொன்னா அவரு ஒத்துக்க மாட்டார்.. இருந்தாலும் சொன்னேன். அவரு கடுப்பாகி, திரும்பவும் கால்குலேட்டர்ல ஒவ்வொண்ணா போட்டுப்பார்த்தார். (அந்தக் கால்குலேட்டரைத் தூக்கி எறியணும்போல தோணுச்சு... பயபுள்ள ஒன்றைமணிநேரமா உக்கார வச்சுட்டானே..). இப்பவும் ஏதோ தப்பா நம்பர் போட்டார்போல. முன்னாடி அவர் சொன்னத விட, அதிகமான தொகை வந்துச்சு. வேறவழியில்லாம திரும்பவும் சரிபார்க்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அரைமணிநேரத்துல முடியவேண்டிய வேலை.. ஆபீசரோட அலப்பறையால மூணு மணிநேரமாகியும் முடியல. ம்ஹூம்.. இது ஆவுறதில்ல.
கொஞ்ச நேரம் கழிச்சு, நா பண்ணிருந்த ரிப்போர்ட்டையே ப்ரிண்ட் எடுத்து நேரா ஆபீசர்கிட்ட குடுத்துட்டு “நீங்க சொன்னது சரிதான் சார். ஒரு நம்பர் தப்பா போட்ருந்தேன். இப்ப சரி பண்ணிட்டேன்“னு சொல்லி நீட்டினேன். “ம்ம்.. நான்தான் சொன்னேன்ல.. எப்பவும் கவனமா வேலைபாரு இந்திரா“னு சொல்லிகிட்டே (சரிதானானு கூடப் பார்க்காம) கையெழுத்துப்போட்டு மேலிடத்துக்கு அனுப்புனாரு. அவங்களும் சரிபார்த்துட்டு, சரியா இருக்குறதா சொன்னாங்களாம். அவரால தான் ரிப்போர்ட் ரெடியாச்சுனு பெருமை பீத்திக்கிட்டார். (ரொம்ம்ம்ப அறிவாளியாச்சே..!).
“போன வாரம் எம்.டியைப் பார்த்தப்ப கூட, உன்னையப் பத்தி பெருமையா சொல்லிவச்சேன். பணி நிரந்தரமாகுறதுக்கு சிபாரிசெல்லாம் பண்ணிட்டு வந்துருக்கேன். நீ என்னடானா இப்டி கவனக்குறைவா இருக்கியே... சரி சரி வேலையைப்பாரு. இனிமேலாவது கரெக்டா ரிப்போர்ட் ரெடி பண்ணப் பழகிக்க“னு சொன்னார்.
எனக்கு சிரிப்பை அடக்க முடியல. போனவாரம் அவரு எம்.டியைப் பார்க்கப் போனப்ப, எம்.டி ஏதோ அவசர மீட்டிங்னு சொல்லி போய்ட்டாராம். ஆபீசரை பார்க்கவேயில்லனு தகவல் வந்துச்சு.
ஊர்ல இருக்குற பெருமை பீத்தகலையான்களும், அதிமேதாவிகளும் ஆபீசர்களா வந்து தொலைச்சுருக்கானுக..
.
.

Thursday, 4 October 2012

உப்புமா.. (04.10.2012)


ரொம்ப நாளைக்கப்புறம் போன மாதம் தான் ஒன்பது பதிவு எழுதியிருக்கேன். 2010ல வலைப்பூ ஆரம்பிச்சு, இடையில ஹேக் ஆகி மறுபடியும் பேக்-அப் எடுத்து புது வலைப்பூ தொடங்கி பதிவுகள் எழுதி..னு நல்லாத்தான் போய்கிட்டு இருந்துச்சு. நடுவுல கொஞ்ச நாள் பதிவுகளோட எண்ணிக்கை குறைஞ்சிடுச்சு. எழுதுற ஆர்வம் குறைஞ்சதும், முகநூல்பக்கம் ஒதுங்குனதும் முக்கியமான காரணம்னு சொல்லணும்.  ஜூலை மாசத்துல நாலே நாலு பதிவு தான் எழுதியிருந்தேன். அப்புறம் ஒருவழியா திரும்பவும் ஓரளவு வேகம்பிடிச்சு, செப்டம்பர்ல ஒன்பது பதிவு தேத்தியாச்சு. (ஒருநாளைக்கு நாலு பதிவு போடுறவங்களுக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா எனக்கு இது பெரிய விஷயமுங்க..) எழுதுற ஆர்வம் இருந்தாலும் இந்திரா“ங்குற அங்கீகாரமும் அடையாளமும் கிடைச்சது வலைப்பூவுல தான். நடுவுல கொஞ்சம் டல்லானாலும் மறுபடியும் பழைய சுறுசுறுப்போட பதிவுகள் தொடரச் செய்யணும்.
:-)
----------------------------------------------------
இந்த மாசத்தோட நான் அலுவலகத்துல சேர்ந்து அஞ்சு வருஷமாகுது. நிரந்தரப் பணியாளராகுற தகுதியை அடைஞ்சுட்டேன். ஆனா நிரந்தரமாக்குறது தான் நிலுவைல இருக்கு. அதுக்கு இன்னும் வருஷக்கணக்காகலாம்.. அரசாங்க அலுவலகமாச்சே!! ஆமை வேகத்துல தான் நடக்கும். இந்த அஞ்சு வருஷத்துல எத்தனையோ தனியார் நிறுவனத்துல வேலைக்கு முயற்சி பண்ணி, கிடைக்குற நேரத்துல வேண்டாம்னு தவிர்த்திருக்கேன். அரசாங்கப்பணி நிரந்தரமாகிடும்குற நம்பிக்கைல. என்ன பண்றது.. நம்பிக்கைதானே வாழ்க்கை. ம்ம்ம் பார்க்கலாம்!!
----------------------------
மீசைக்காரனுக்கு கூடிய சீக்கிரம் குழந்தை பிறக்கப் போகுது. போன வாரம் தான் வளைகாப்பு போட்டு கூட்டிகிட்டு வந்துருக்காங்க. டிசம்பர்ல குழந்தை பிறந்திடும்னு சொல்லியிருக்காங்க. அவளுக்கு நல்லபடியா சுகப்பிரசவமாகனும்னு வாழ்த்துங்கப்பா..
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...