Wednesday, 29 August 2012

அத்தனையும் மீறி..நேசத்தின் அவசியமின்றி
நிகழ்ந்திடலாம் ஒரு பிரிவு..!

நேரடியாகச் சொல்லாமல்
நெருங்கிடலாம் ஒரு ஏமாற்றம்..!

தார்மீகப் பொறுப்பேற்று
தாக்கிடலாம் ஒரு தோல்வி..!

அடக்க முடியாமல்
ஆர்ப்பரித்திடலாம் ஒரு அழுகை..!

நட்பைத் தகர்த்து
நையாண்டி செய்யலாம் ஒரு துரோகம்..!

வெறுமை சூழ்ந்து
வேடிக்கை காட்டலாம் ஒரு இயலாமை..!

ஏதுமற்ற வெற்றிடமாய்
எளிதாய்த் தோன்றிடலாம் ஒரு விரக்தி..!

நெஞ்சுக்கூட்டுக்குள் சுருண்டு
நீங்காமல் வந்திடலாம் ஒரு வலி..!

அத்தனையும் மீறி
வீழ்ந்துவிட்ட இடத்திலிருந்து
விலகாமல் எழக்கூடும் ஒரு (தன்)நம்பிக்கை..!!
.
.

Monday, 27 August 2012

பதிவர் சந்திப்பும் களைகட்டிய பதிவுலகமும்..(சந்திப்புல கலந்துகிட்டவங்க தான் அதுபற்றிய பதிவு போடணுமா என்ன? கலந்துக்கலைனாலும் நாங்களும் எழுதுவோம்ல..)
ரொம்ப நாளைக்குப் பின் சமீபத்தில் பதிவுலகம் களைகட்டியது. இதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது சென்னை பதிவர் சந்திப்பு என்பதை யாராலும் மறுக்க முடியாது. போன வாரம் முழுக்க பதிவர்களுக்கிடையே இதுபற்றி எழுந்த சர்ச்சைகளும் சண்டைகளும் அனைவரும் அறிந்ததே.. இந்த வாக்குவாதங்கள்கூட, பதிவர் சந்திப்பு பற்றிய ஒரு வித எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம்.
என்னால் சென்னைப் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ள முடியல. ஆனாலும் அதில் கலந்துகொண்டவர்கள் பகிர்ந்த பதிவுகளும் புகைப்படங்களும் சந்திப்பில் கலந்துகொள்ளாத குறையை நீக்கி நிறைவைத் தந்தது. முகம் தெரியாத, பதிவுகள் மூலமே பழகிய பல நண்பர்கள் ஒன்றாய் இணைவதற்கு இதுமாதிரியான சந்திப்புகள் பெரிதும் உதவுகிறது. விழா பற்றிய நிறை குறை விமர்சனங்கள் வரலாம்.. வராமலும் போகலாம். ஆனாலும் விழா சிறப்பாய் அமைய பாடுபட்டவர்களுக்கு முதலில் எனது பாராட்டுக்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்..
கொஞ்ச நாளாவே பல பதிவர்கள் பதிவெழுதுறத குறைச்சிட்டாங்க.. நிறுத்திட்டாங்கனு கூட சொல்லலாம். சிபி செந்தில், சங்கவி சதிஷ், தமிழ்வாசி பிரகாஷ், இன்னும் ஒரு சில பதிவர்கள் தவிர நிறையபேர் காணாமப் போயிட்டாங்க. பல காரணங்களுடன் ஆர்வம் குறைந்தமையும் ஒரு முக்கிய காரணம். ஏனோதானோனு பின்னூட்டமும், நட்பு வட்டார கும்மியுமே இடையில் நிலவியது. பலருடைய பக்கங்களில் சுயதம்பட்டங்களும் தனிப்பட்ட விமர்சனங்களும் மட்டுமே அதிகமாவே இருந்தது.
இதுல வருத்தப்பட வேண்டிய இன்னொரு விஷயம், சிலருடைய வலைப்பக்கம், வார இதழ்களில் வெளிவரும்குற ஒரே காரணத்துக்காக மட்டும் பதிவெழுதப்படுதுங்குறது தான். பதிவுலகம்குறது நம்மளோட எழுத்துக்களுக்கு கிடைக்கும் மிகச் சிறந்த அங்கீகாரம். அதை இப்படி கொச்சைப்படுத்த வேண்டாம்குறது தான் என்னுடைய ஆதங்கம். எதைப் பற்றியும் கவலைப்படாமல், பல பிரபல மற்றும் பிரபலமாகாத பதிவர்கள் தொடர்ந்து நல்ல பதிவுகளை எழுதுறதுதான் இங்க இருக்குற ஒரே ஆறுதல்.
இது எல்லாத்தையும் தாண்டி, போன வாரம் பதிவர்களுக்குள் நடந்த விவாதங்களும் ஆதரவுகளும் கொஞ்சம் “அப்பாடா“னு சொல்ல வச்சுச்சு. பதிவுலகத்துல ஆரம்பநிலைல இருந்தவொரு சுறுசுறுப்பு மறுபடியும் வந்துச்சுனு தான் சொல்லணும். (அதுக்காக மாறி மாறி சண்டைபோடணும்னு சொல்ல வரல). பதிவுகள் சரமாறியா எழுதப்பட்டுச்சு. அதுவே ஒரு ஆரோக்யமான விஷயம் தான்.
விவாதம் எதுனால.. யார் ஜெயிச்சது.. யார் விட்டுக்கொடுத்தது.. யார் கழுவி கழுவி ஊத்துனதுங்குற அலசலைக் கொஞ்சம் தள்ளிவச்சுட்டுப் பார்த்தோம்னா, பதிவர்களுக்குள் இருந்த பழைய வேகத்தையும், ஒற்றுமையையும் பாராட்டியே ஆகணும். (அவ்வ்வ்வ்.. நா சரியாதான் பேசுறேனா? போன வாரப் பதிவுகள்லயிருந்தே கொஞ்சம் டெரரா இருக்கு).
தொடர்ந்து பதிவுலகில் நல்லநல்ல பதிவுகளும் அதற்கான வரவேற்பும் அங்கீகாரமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையுடன்..
அடுத்த பதிவில் சந்திப்போம்..
.
.

Friday, 17 August 2012

விலகிச் செல்லும் வாழ்க்கை.. (படித்ததில் பிடித்தது)இன்றும் ஒன்றை என்னைவிட்டு வழியனுப்ப நேர்கிறது..
நேற்றும் அதற்கு முன்பும் கூட..

இது வாசல் வரை சென்று
வெறுமனே கையசைத்துத் திரும்புதல் அல்ல.
ஒவ்வொரு வழியனுப்புதலும்
வயதை மட்டும் வைத்துக்கொண்டு
வாழ்வை வழியனுப்புதல் போல
இதயத்தை கணக்க வைக்கிறது.

இப்படியே நம் நண்பர்களை
நம் நினைவுகளை
நம் சிந்தனைகளை என
தினமும் ஏதாவது ஒன்றை வழியனுப்பிக் கொண்டிருப்பதை
நாம் யாரும் ஆழமாய் அறிவதில்லை..!!

ஆனால் பயணத்தில் விலகிப் போகும்
ஒற்றை மரத்தின் நிழலையும்
என்னோடு அழைத்துப் போக நினைக்கிறேன்..!

இந்த வாசலில் மிகவும் விரும்பத்தக்க
எதையோ எதிர்பார்த்து
எப்போதும் தனித்திருக்கிறோம்..
ஆனால் எப்போதும்
யாராலுமே விரும்ப இயலாத
கள்ளிச் செடிகள் மட்டும்தான்
நம் வாழ்க்கை முழுவதற்குமான
மலர்ச் செண்டுகளாய் அனுப்பப்படுகின்றன..!!
.
.

Wednesday, 8 August 2012

ஈமு போனா என்ன.. பன்னி வரலாம்!! ஏமாற ரெடியா இருப்போம்.
முதல்ல நிதி நிறுவனங்கள்ல பணத்தப் போட்டு ஏமாந்தாங்க.. அப்புறம் பாலிசி போடுறேன்னு தனியார் நிறுவனத்துல கட்டி ஏமாந்தாங்க.. அப்புறம் வெளிநாடு போறேன்னு பணத்தக்கட்டி ஏமாந்தாங்க.. வெளிநாடு போய் தான் சம்பாதிக்க முடியல.. வீட்டுலயே சுயதொழில் தொடங்கலாம்னு எங்கயாவது மூலதனத்தைக் கட்டி தெரியாத தொழில்ல இறங்கி, அப்புறம் அவன் ஏமாத்திட்டான்னு போட்டதை எடுக்க முடியாம ஏமாந்தாங்க..
சமீபத்துல அப்ரோ நிறுவனத்துல ஆரம்பிச்சு இப்ப லேட்டஸ்ட்டா ஈமுல வந்து நிக்குது..
குடும்ப கஷ்டம், வறுமை, பணத்துக்குப் பாதுகாப்பு, பணத்தேவைனு நிறைய காரணங்களை அடுக்கிக்கிட்டே போனாலும் இதுக்கெல்லாத்துக்கும் மூல காரணம்.. விக்ரமன் படத்துல ஒரே பாட்டுல முன்னுக்கு வர்ற மாதிரி சீக்கிரம் சம்பாதிக்கணும்.. நிறைய பணம் சேர்த்துடணும்குறது தான்.
மக்களைப் பெரும்பாலும் தன்பக்கம் ஈர்க்குறது, இலாப விகிதம் அதிகம்குற விளம்பரங்கள் தான். அரசாங்க வங்கிகள்ல போடுற பணத்துக்குண்டான வட்டியை விட, தனியார் நிதி நிறுவனங்கள்ல கொடுக்கப்படுற வட்டி அதிகம்னு சொல்றதை நம்பி பணத்தை அதில் போடலாம்னு முடிவெடுக்குறாங்க. இப்ப கூட ஈமு கோழி விளம்பரத்துல, மாசத்துக்கு பத்தாயிரத்துலருந்து ஐம்பதாயிரம் வரைக்கும் சம்பாதிக்கலாம்.. அதுவும் ஒரு நாளைக்கு இருபது நிமிஷம் ஒதுக்குனாலே போதும்னு திரைப்பட நடிகர்களையெல்லாம் வச்சு ஏகபோகமா அறிவிச்சு தள்ளுனாங்க.
இது சாத்தியமானு யாரும் யோசிக்கிறதே கிடையாது. அக்கம்பக்கம் கடன் வாங்கியும், நகைகளை அடகு வச்சும் நிறைய பேர் இந்த தொழில்ல உடனடியா ஈடுபட்டாங்க. ஆனா இன்னைக்கு செய்திப்படி, போட்ட முதல் கிடைக்குமாங்குறதே சந்தேகமா இருக்காம்..
இந்த தவறுக்கு தன்னைத் தவிர யாரையும் பொறுப்பேற்க சொல்ல முடியாது. இதுக்கு அறியாமை.. இயலாமை.. என்பதைத் தாண்டி பேராசை என்பதே சரியான காரணம்.
ஒரு சம்பவம் நடந்ததுக்கப்புறம் தான் நமக்கு எச்சரிக்கையுடன் இருக்கணும்னு புத்தி வரும். ஆனா, அடுத்து கொஞ்ச நாள்ல பன்னி வளர்க்க அதிக பணம் கொடுக்குறோம்னு விளம்பரம் வந்தா அதுக்கும் பணம் கட்டுவாங்க. தான் பார்த்துக்கொண்டிருக்குற வேலைய ஒழுங்கா பார்த்தாலே போதும். அதுல எப்படி முன்னேறுறது.. எப்படி இலாபம் அதிகம் பெறலாம்னு யோசிச்சாலே போதும்.. இந்த மாதிரி ஏமாந்த பணத்தையெல்லாம் தன்னோட தொழில்ல போட்ருந்தா கொஞ்சமாவது ப்ரயோஜனம் இருந்துருக்குமோ என்னவோ..
இன்னும் எத்தனையெத்தனை மோசடி நிறுவனங்கள் வரப்போகுதோ தெரியல.. ஆனா நிச்சயம் அதுல ஏமாந்துபோறவங்களுக்குப் பஞ்சமே இருக்காது. ஏமாந்துபோறவன் இருக்குறவரைக்கும் ஏமாத்துறவன் தன் பணியை திறம்பட செய்துகொண்டுதான் இருப்பான்.
அடுத்த பதிவுல சந்திப்போம்..
.
.

Monday, 6 August 2012

கொஞ்சம் கொசுவத்தி.. கொஞ்சம் பல்பு..ஒரு விஷயம் முதன் முதலா நமக்கு அனுபமாகுற ஸ்வாரஸ்யமே தனிதான். அதுலயும் கொஞ்சம் பல்பு வாங்குன அனுபவமா இருந்துச்சுனா சொல்லவே வேணாம். நா நிறைய பல்பு வாங்கியிருக்கேன்குறது வேற விஷயம். இருந்தாலும் ஒரு விஷயத்தை முதன்முதலா முயலும்போதே பல்பு வாங்குன அனுபவம் எனக்குண்டு.
உள்ளூர் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சில செமையா சொதப்பி மேனேஜர்கிட்ட பல்பு வாங்குன அனுபவமும் உண்டு. (ஏற்கனவே இத ஒரு பதிவுல விளக்கமா சொல்லியிருந்தேன்.)
முதன்முதலா சமையல் பண்ணும்போது, என்னென்ன போட்டு தாளிக்கணும்னு தெரியாம அஞ்சறைப்பெட்டில இருந்த கடுகு, சோம்பு, சீரகம், மிளகு, உளுந்து, வெந்தயம், பட்டை, கிராம்புனு ஒண்ணு விடாம எடுத்து எண்ணெய்ல போட்டு “யாகம்“ வளர்த்த அனுபவமும் உண்டு.
அதுமாதிரி இன்னும் சில (பல்பு நிறைந்த) அனுபவங்கள்..
1. ATM கார்டு வந்த புதுசுல ரொம்ப நாளா அத உபயோகிக்காமயே இருந்தேன். அக்கவுண்ட்ல பணமில்லேங்குறது காரணமா இருந்தாலும் எப்டி உபயோகிக்கிறதுனு தெரியாம இருந்ததும் காரணம். தோழிகள்கிட்ட கேக்கலாம்னா “இது கூட தெரியாதா“னு கிண்டல் செய்துடுவாங்களோனு சும்மா இருந்துட்டேன். அப்புறம் ஒரு முறை, முதல்தடவை கார்டை உள்ள போட, அது உள்ளே இழுத்துக்கிடுச்சு. ஒரு சில ATM இயந்திரங்கள் கார்டுகளை உள்ளே இழுத்துக்கும்னு எனக்குத் தெரியாதனால எனக்குப் பதட்டமாய்டுச்சு. “ஐயயோ“னு கத்திட்டேன். உடனே வெளில நின்னுகிட்டிருந்த செக்யூரிட்டி வந்துட்டார். “என் கார்டு என் கார்டு“னு டென்சனா சொன்னேன். அவரு சிரிச்சுகிட்டே, “பணம் எடுத்ததும் வெளில வந்துடும்மா. இதுக்கா இப்டி கத்துனீங்க“னு சொல்லிட்டு போயிட்டார். நல்லவேலை ATM இயந்திரத்தைப் பிடிச்சு ஆட்டுறதுக்கு முயற்சி பண்ணேன்.. அத அவரு பாக்கல.. ஹிஹி..
2. நா அலுவலகத்துல சேர்றதுக்கு முன்னாடி, ஒரு கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்த்தேன். COA courseக்கு Basicலருந்து கம்ப்யூட்டர் சொல்லிக்குடுக்க சொல்லிருந்தாங்க. ஒரு சில சின்னப் பசங்களுக்கு சொல்லிக்குடுத்துகிட்டு இருந்தேன். அப்ப ஒரு நடுத்தர வயதுக்காரர் சேர்ந்திருந்தார். அவருக்கு சொல்லிக்குடுக்க சொன்னாங்க. Basic knowledge வேணும்னு, நானும் அவர் பக்கத்துல உட்கார்ந்து, கம்ப்யூட்டர்னா என்ன.. அதை எதுக்கு உபயோகிக்கிறோம்.. அப்டினெல்லாம் சொல்ல ஆரம்பிச்சேன். பத்து நிமிஷம் பொறுமையா கேட்டுகிட்டுருந்த அவர் திடீருனு கோவமா கத்த ஆரம்பிச்சுட்டாரு. “ஏம்மா? கம்யூட்டர்னா என்னானு தெரியாமலா வந்திருக்கோம்? இது கூட தெரியாத முட்டாள்னு நெனச்சியா? நீயெல்லாம் ஒரு டீச்சரா? உனக்குத் தான் கம்ப்யூட்டர்பத்தி தெரியும்னு பந்தா பண்றியா?“னு கேட்டுட்டு, மேனேஜர்கிட்டப்போய் வேற ஆள சொல்லிக்குடுக்க சொல்லுங்கனு சொல்லிட்டுப் போய்ட்டார். அவ்வ்வ்..
3. நானும் என் தோழிகள் வட்டாரமும் ஒரு கோர்ஸ் சேர்ந்திருந்தோம். அங்க மாணவர்களுக்கிடைல Culturals போட்டி வச்சாங்க. எல்லாரும் ஒவ்வொரு போட்டில கலந்துக்கணும்னு கட்டாயம். அதுனால நா பாட்டுப் போட்டில சேர்ந்தேன். நா முதல்முதலா போட்டினு கலந்துகிட்டதுனா அதுதான். ஆனா என்னாலயே நம்ப முடியல.. எனக்கு மூணாவது பரிசு கெடச்சுச்சு. தோழிங்க எல்லார்க்கும் ஒரே சந்தோசம். ஆனாலும் சந்தேகப்பட்டு மார்க் போட்டவங்ககிட்ட “எனக்கு மூணாவது பரிசு எந்த அடிப்படைல குடுத்தீங்க“னு கேட்டேன். “நீங்க பாடின அதே பாட்ட, இன்னொரு மாணவி உங்களவிட கேவலமா பாடினாங்க. அதுனால நீங்க பாடினது பரவாயில்லாம இருந்துச்சு.. அதுக்குதான் குடுத்தோம்“னு சொன்னாங்க. அவ்வ்வ்..
இன்னும் நிறைய பல்பு இருக்கு.. வேறு சில பதிவுல சொல்றேங்க..
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...