Tuesday, 26 June 2012

அபிப்ராயங்கள் ≠ அனுபவங்கள்..நம்ம ஊர்ல ஒரு கெட்ட பழக்கம் உண்டு. ஏதாவது அறிவுரையோ அபிப்ராயத்தையோ சொல்ல ஆரம்பிச்சவுடனே, “உனக்கு இதப் பத்தி என்ன தெரியும்? அனுபவமில்லாம பேசாத“னு சொல்லி வாய அடச்சிடுவாங்க.  வாஸ்தவம் தான்.. ஆனா இது எல்லா விஷயத்துக்கும் பொருந்தாது. உதாரணத்துக்கு, பத்தாவது மாடிலருந்து கீழ குதிச்சா என்ன ஆகும்னு சொல்றதுக்கு, அப்படி குதிச்சுப் பார்த்த அனுபவம் இருக்கணும்னு அவசியம் இல்லையே.. சரி தானே?
நா எழுதுன “சந்தோசமா சரக்கடிங்க பதிவுலயும் இந்தக் கேள்வி வந்துச்சு.. குடிப்பழக்கத்துல இருக்குற கெடுதல்கள்பத்தி சொல்றதுக்கு குடிச்சுப் பார்த்திருக்கணும்னும், குடும்பக் கட்டுப்பாட்டு அலுவலகத்துல வேலை பார்க்குறதுக்கு குழந்தை பெத்திருக்கணும்னும் அவசியம் இல்லையே.. அனுபவப்பூர்வமா அறிவுரை சொல்றதுல நிறைய உபயோகம் இருக்கலாம். அதே மாதிரி ஒட்டுமொத்தமா அனுபவம் இருந்தா மட்டும்தான் ஒரு விஷயம் பற்றி பேசணும்னும் சொல்லிட முடியாது. கேள்வி ஞானம் மட்டுமே வச்சு சொல்லப்படுற அபிப்ராயங்களுக்கும் மதிப்பு இருக்கத்தான் செய்யும்.
“நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்“னு விளம்பரம் பண்ற மாதிரி ஒருசிலர் வெட்டியா, கடனேனு கருத்து சொல்வாங்க.. அவங்களுக்கு வேணும்னா இப்படி சொல்லி ஓரங்கட்டலாம். ஆனா உபயோகமா, நமக்கு உதவுற நோக்கத்துல அபிப்ராயங்களும் அறிவுரைகளும் சொல்றவங்கள நாம ஒதுக்கக் கூடாது.
அப்புறம் ஒரு சிலர் இருப்பாங்க.. வெறும் யூகங்கள் அடிப்படைலயே முடிவெடுத்துடுவாங்க. உதாரணத்துக்கு காட்டன் சேலை கட்டி கண்ணாடி போட்டு, கைல குடை வச்சிருந்தா “டீச்சர்“, முறுக்கு மீசையும் தொப்பையுமா இருந்தா “போலீஸ்“ங்குற மாதிரி! இது அந்தந்த துறைகளுக்குப் பொருந்தலாமே தவிர, இத வச்சு மட்டுமே உறுதி செய்திட முடியாது.. “சிகப்பா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான்“னு சொல்ற மாதிரி.
நேத்து ஒரு நண்பர்கிட்ட பேசும்போது, “ஏன் இந்திரா.. காதல் தோல்வி கவிதைகள் அதிகமா எழுதுற மாதிரியிருக்கே.. உங்களுக்கு காதல் தோல்வியோ?“னு துக்கம் விசாரிச்சார்.. (அடக்கொடுமையே..). எழுத்துக்களுக்கும் வாழ்க்கைக்கும் ஏதாவது ஒரு சில சம்பந்தங்கள் இருக்கலாம். ஆனா எழுதுற எல்லாமே வாழ்க்கைல நடந்திருக்கணும்னு அவசியமில்ல. அதுலயும் சொந்த அனுபவமாகத் தான் இருக்க வேண்டும்குற கட்டாயமுமில்ல. புனைவுகளாக் கூட இருக்கலாமே.. எழுதுற கவிதை சந்தோசமா இருந்தா காதல் கைகூடிருச்சுனும், சோகமா இருந்தா தோல்வியடைஞ்சுடுச்சுனும் அர்த்தம் இல்ல. இத விட முதலாவது, கவிதை எழுதுறவங்க எல்லாருக்கும் காதலனோ காதலியோ இருக்கணும்னு சட்டமும் இல்ல.
நா முன்னாடியே சொன்ன மாதிரி, அபிப்ராயங்கள் சொல்றதுக்கும் அனுபவத்துக்கும் தொடர்பு இருக்கணும்னு அவசியமில்லை. பார்த்தது, கேள்விப்பட்டதா கூட இருக்கலாம். அதுல இருக்குற விஷயங்கள் எப்படிப்பட்டதுனு மட்டும் நாம எடுத்துக்கணுமே தவிர, அத யார் சொன்னது? அவுங்களுக்கு இதுல அனுபவம் இருக்குமா?ங்குற ஆராய்ச்சி தேவையில்லாதது.
தோழி ரேவா சொன்னது போல, “கவிதைகளுக்கு அனுபவம் தேவையில்லை”..   இது கவிதைக்கு மட்டும் இல்ல.. கருத்துக்களுக்கும் தான்.
சரியா?
.
.

Thursday, 21 June 2012

மனதிற்கும் உண்டோ ஓர் அரிதாரம்??
வெறுப்பின் உச்சகட்டம் நம் பிரிவு..
பார்க்க மாட்டேன் என நானும்
நினைக்கக்கூட மாட்டேன் என நீயும்..!!
.
அடக்கிவைத்த அத்தனை கோபங்களையும்
கொட்டித் தீர்த்துவிட்டுக் கிளம்ப,
அந்நொடிமுதல் ஆரம்பித்தது நாமில்லா நமது வாழ்க்கை.
.
சுதந்திரம் கிடைத்ததென..
கட்டுப்பாடுகள் இல்லையென..
கடிவாளங்கள் அறுந்ததென..
அடிமைத்தனம் முடிந்ததென..
போலியான சமாதானங்கள் நமக்குள்ளே!!
.
நிம்மதியாய் இருக்கிறோமென
நமக்கு நாமே சொல்லிப் பழக்கினோம்..
மாற்றங்கள் நம் அலைபேசி எண்களிலும்
மின்னஞ்சல் கடவுச்சொல்லிலும் புகுத்தினோம்,
அதுவே மனதிற்கும் என்ற நாடகமாய்..!!
.
வந்துபோகும் நினைவுகளையும்
வலுக்கட்டாயமாய் தள்ளிவிட்டு
கெட்ட கனவுகள் என்றும் கறுப்பு அத்தியாயம் என்றும்
பொய்யாகப் பொய்யுரைத்தோம்.
.
எல்லாம் சரிதான்.. ஆனாலும்..
நாம் பேசியமர்ந்த இடத்தைக் கடக்கும்போதும்
உனக்குப் பிடித்த பாடல் காதில் விழும்போதும்
உன் விருப்ப நாயகனைத் திரையில் பார்க்கும்போதும்
உனக்குப் பிடித்த உணவை உண்ணும்போதும்
ஏன்.... இந்த வரிகளை எழுதும்போதும் கூட..
சட்டென ஸ்தம்பித்து உண்டாகும்
ஏனோ ஆழ்மனதில் ஒருவித வலி!!
.
இது தான்.. இப்படித் தான் என்று
தேற்றிக்கொண்டு சகஜமானாலும்,
ஒரு சில கேள்விகளுக்கும் வலிகளுக்கும்
என்றைக்குமே விடை கிடைப்பதில்லை..!!
.
மனிதர்களுக்கு அரிதாரமிடலாமே தவிர
மனதிற்கு எப்போதும் முடிவதில்லை..!!
.
.

Monday, 18 June 2012

ம(னி)தம்??!!நண்பர் ஒருவரின் வலைப்பூவில் சமூக அக்கறையுள்ள பதிவொன்றை எழுதியிருந்தார் (அப்படித்தான் நினைத்தேன்). ஸ்வாரஸ்யமாகவும் விழிப்புணர்வுத் தகவலாகவும் இருந்ததால் படிக்க ஆரம்பித்தேன். எல்லாமே நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கடைசியில் அவர் சொன்ன தகவல்.. மொத்தப் பதிவின் யதார்த்தத்தையும் கெடுத்துவிட்டது. அவர் தன்னுடைய மதம் பற்றிய பெருமையுடன் பதிவை முடித்திருந்தார். பதிவில் குறிப்பிட்டிருந்த தகவல்களுக்கும் அவருடைய முடிவுரைக்கும் யாதொரு தொடர்பும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பதிவை படித்த போது நான் கொண்டிருந்த ஆர்வம், அதை படித்து முடித்தபின் அதிருப்தியையே கொண்டுவந்தது.
அவருடைய பதிவில் “சத்யமேவ ஜெயதே“ நிகழ்ச்சி பற்றி கூறியிருந்தார். அமீர்கான் பற்றி விமர்சனம் செய்திருந்தார். மருத்துவத் துறை மற்றும் பிற துறைகளை முன்வைத்து அலசும் அமீர், அந்நிகழ்ச்சியில் திரைப்படத் துறையைப் பற்றியும் விமர்சிக்கலாமே என்ற கேள்வியை முன்வைத்தார். தன்னுடைய துறை சார்ந்த அவலங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அதிலுள்ள களைகளை அகற்ற முனையலாமே என்றும் எழுதியிருந்தார். மேலும் தவறுகளை சுட்டிக்காட்டும் நிகழ்ச்சிக்குழுவினர், அதற்கான வேர்களை சரிசெய்யும் பணிகளையும் மேற்கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார்.. இது நிச்சயம் பாராட்டுக்குரியதே..
ஆனால் இறுதியில் அமீர்கானின்  மதத்தை குறிப்பிட்டு, இம்மதத்தில் இருந்துகொண்டு இவருக்கு ஏன் இதெல்லாம் தெரியவில்லை?? மனைவி அல்லாத பிற பெண்களுடன் சினிமாவில் முத்தமிட்டு நடனமாடுவதும் அதை உலகிற்கு திரைப்படம் மூலம் காட்டுவதும் தன் மதத்திற்கு எதிரானது என்று அமீருக்கு தெரியாதா? இப்படி மதத்திற்கு எதிராக செயல்படும் இவர் அத்துறையை விட்டு மனம் திருந்தியவராக இதுவரை செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டவராக இன்றே வெளியேறி விட வேண்டும்...! செய்வாரா அமீர்கான்..? 'சமூக தீமையை எதிர்க்கும் மனிதன்' & 'மதம்' என்று இரண்டிலும் தன்னளவில் நேர்மையில்லாத அமீர்கான், இனியாவது திருந்துவாரா..? என்று என்னென்னவோ கூறி முடித்திருந்தார்.
எனக்கு ஒரு விஷயம் புரியவேயில்லை.. நிகழ்ச்சிக்கும் மதத்திற்கு என்ன சம்பந்தம் இருக்கிறது? சமூக விழிப்புணர்வு பற்றிய விஷயங்களில் மதத்திற்கு என்ன வேலையிருக்கிறது? சமுதாய அக்கறையையும் தாண்டி, தங்களுடைய மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் முன்னுரிமை கொடுப்பது, மக்களின் அறியாமையையே காட்டுகிறது.
இந்தப் பதிவை படித்துவிட்டு, இவரோ.. இவர் சார்பான மதத்தினரோ வாக்குவாதம் செய்யலாம். நான் இந்தப் பதிவை எழுதக் காரணம், குறிப்பிட்ட இவருடைய மதம் பற்றி மட்டுமல்ல.. பொதுவாக எல்லா மதங்களையும் முன்வைத்துத்தான். அது இந்துவாகவோ கிறிஸ்த்துவமாகவோ இஸ்லாமாகவோ ஏன்.. பௌத்த மதமாகவோ கூட இருக்கலாம். மக்களைப் பற்றியும், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதற்கு, அதை சரிசெய்ய தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதற்கு, குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவனாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.. அப்படி செய்பவர்களைப் பாராட்டுவதற்கு, அந்த மதங்களை முன்வைக்க வேண்டிய அவசியமும் இல்லையே..
மதம் பற்றிய மனிதரின் நம்பிக்கை அவரவர் மனதைப் பொறுத்தது. அதை சமூக விழிப்புணர்வில் ஏன் திணிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய கேள்வி..
ஒருவர் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டவோ, நல்லது செய்தால் அதைப் பாராட்டவோ மதம் தேவையில்லையே.. மனதும் கொஞ்சம் மனிதமும் இருந்தாலே போதுமானது. அதைவிடுத்து, நல்லவை செய்பவர்களை “என் மதக்காரன்.. அதனால் நல்லவன்“ என்றும், தவறு செய்பவர்களை “என் மதத்தில் இருந்துகொண்டு இப்படி செய்கிறானே.. இவன் மத துரோகிஎன்றும் மத அடிப்படையில் எதற்காக விமர்சிக்க வேண்டும்?
இதுபோன்ற ஒருசிலரின் அதிகப்பிரசங்கித்தனங்கள், ஒட்டுமொத்தமான தவறான கண்ணோட்டங்களை ஏற்படுத்தி விடுகிறதே..  சக மனிதனை, அவன் செய்யும் செயல்களின் அடிப்படையில் மதிப்பிட வேண்டுமே தவிர, எந்த மதத்தில் இருக்கிறான் என்பதை வைத்து எடைபோடுவது முட்டாள் தனம்.
இவர்கள், தங்களின் மதப் பிரச்சாரங்களை எதற்காக சமூக அக்கறை என்ற போர்வையில் செய்திட வேண்டும்? வெளிப்படையாகவே செய்துவிட்டுப் போகலாமே..
நமக்குத் தேவை, மதங்கள் அல்ல.. மனிதம் தான். நாலு நாள் பட்டினி கிடப்பவனிடம் நம் மதங்களின் பெருமை பிதற்றல்கள் செல்லுபடியாகாது.. அவனுக்குத் தேவை அப்போதைக்கு அவன் பசிதீர்க்கும் உணவு மட்டுமே. அதைத் தருபவன் தான் அந்த நிமிடத்தில் அவனுடைய இறைவன். இது பலருக்குப் புரிவதில்லை.
மீண்டுமொருமுறை நினைவுபடுத்துகிறேன்.. இந்தப் பதிவு, குறிப்பிட்ட ஒரு மதம் என்றில்லாமல், எல்லா மதங்களையும், மதப்பிரச்சாரம் செய்பவர்களையும் முன்வைத்து எழுதப்பட்டது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு, பதிவின் உட்பொருளைப் புரிந்துகொள்ள முயலுங்கள்.
.
.

Friday, 15 June 2012

ஆதிக்க மனப்பான்மை (Superiority Complex)..
நான் செய்வது தான் சரி, என்னுடைய வார்த்தை தான் கடைநிலையாக இருக்க வேண்டும், மற்றவர்கள் எனக்கு அடங்கித் தான் போக வேண்டும், என்னை யாரும் குற்றம் சொல்வது எனக்குப் பிடிக்காது, நான் எப்போதும் அடுத்தவரை குறை சொல்லிக்கொண்டே குற்றம் சுமத்திக்கொண்டே இருப்பேன் என்ற மனோநிலை உங்களுக்குள் இருக்கிறதா? ஒருமுறைக்கு பலமுறை இது சரியா என உள்மனதைக் கேளுங்கள். உங்கள் திறமையின் அடிப்படையில் செயல்களின் அடிப்படையில், அதன் விளைவுகளின் அடிப்படையில் அனைத்தும் சரியாகவே இருந்தால் நீங்கள் பாராட்டத்தக்கவர். 

ஆனால் துரதிருஷ்டவசமாக பெரும்பாலோனோர் அப்படி இருப்பதில்லை. இப்படித்தான் எனில் நீங்கள் மற்றவரை ஆதிக்கம் செலுத்தியே காலத்தைக் கழிப்பவர், மற்றவரை மதிக்கத் தெரியாதவர்.. இன்னும் சொல்லப்போனால் பெரும்பாலானவர்களால் வெறுக்கப்படுபவர் நீங்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்னும் தன்னை பற்றிய இயல்புக்கு மீறிய கூடுதல் மதிப்பீடு - ஆண் பெண் என்ற பாகுபாடில்லாமல் இருதரப்பினருக்கும் இந்தக் குணம் இருக்க வாய்ப்புண்டு.

ஊடுருவிப் பார்க்கும்போது இது தாழ்வு மனப்பான்மையின் மறைமுக வெளிப்பாடே! அடுத்தவர்கள் தன்னை குறை சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தால், தான் முந்திக்கொள்வது. அடுத்தவர்கள் தன்னை தாழ்த்திவிடுவார்களோ என்று நினைத்து, அடுத்தவர்களை எப்போதும் தாழ்த்திப் பேசுவது. தன்மேல் சொல்லப்படும் குற்றங்களையும், சுட்டிக்காட்டப்படும் தவறுகளையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இல்லாமல், தான் செய்வதும் எப்போதும் சரியே என்ற பிடிவாதத்தை வளர்த்துக்கொள்வதே ஆதிக்க மனப்பான்மையை உருவாக்குகிறது.

தன் நண்பர்களிடமும் உறவுகளிடமும் தனக்கென போலியாக ஒரு உருவத்தை செதுக்கிக்கொள்ள, சுப்பீரியாரிட்டி காம்ளக்ஸ் எனும் குணத்தை இவர்கள் கையாளுகின்றனர். எப்போதும் அடுத்தவர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுக்காமல், தான் சொல்வது மட்டுமே சரி என்று மனிதர்கள் இயங்க ஆரம்பிக்கும் போது தன்னிச்சியாகவே இவர்களுக்கு இருக்கும் மதிப்பு சமூகத்தில் கெட்டுப் போய்விடுகிறது என்பதை இவர்கள் புரிந்துகொள்வதில்லை. தான் நேசிப்பவர்களிடம் எப்போதும் அன்பால் ஆதிக்கம் செய்யாமல், கோபங்களாலும், வாக்குவாதங்களாலும், குறை சொல்லும் தன்மையாலும் தான் செய்வதுதான் சரி என்று நிறுவ இவர்கள் மேற்கொள்ளும் வழிமுறைகள் பல விளைவுகளை உண்டாக்குகின்றன.

ஏதேனும் வாக்குவாதங்கள் ஏற்படின், மற்றவருடைய கருத்துக்களை காதில் வாங்கிக்கொள்ளாமல், தன்னுடைய கண்ணோட்டத்தினை மட்டுமே கருத்தில் கொண்டு முடிவெடுப்பது... பின் “நீ என்னைக் குறை சொல்லாதே, உன் செயலும் கூடத்தான் எனக்குப் பிடிக்கவில்லை எனவே முதலில் உன்னைத் திருத்திக்கொள்” என்று பிறர் மேல் சாடுவது... தனக்குப் பிடித்தவைதான் தன்னை நேசிப்பவர்களுக்கும் பிடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது... தங்களுடைய விருப்பங்களை அடுத்தவர் மேல் திணிப்பது... இவை போன்ற பல செயல்களினால் நேசிப்பவர்கள் முதல் சாமானியர்கள் வரை எல்லோரிடத்திலும் இவர்களுக்கென ஒரு குறிப்பிட்ட வட்டத்தைப் வரைந்து கொள்கின்றனர்.

இவர்களின் இந்த மனப்பான்மையினால் என்ன விளைவு ஏற்படுகிறது என்பதை எப்போதும் இவர்கள் சிந்திப்பதே இல்லை. இவர்களுடைய பேச்சுக்களும் செயல்களும் ஒருவரை எந்த அளவிற்குக் காயப்படுத்தும் என்பதை உணருவதே இல்லை. வெளி உலகில் இவர்களது இந்த குணம் அடங்கியிருந்தாலும், நேசிப்பவர்களிடம் குறிப்பாக தங்கள் வாழ்க்கைத் துணையிடம் கட்டாயம் மேலோங்கி இருக்கும். இதில் இருக்கும் பாதிப்பு என்னவெனில், தான் செய்வது எப்போதும் சரியாகவே இருக்கும் என்று நினைத்துக்கொள்வதால், இவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள முயற்சிப்பதே இல்லை.

அடுத்தவர்களை மட்டம் தட்டுவது, தன்னைத் தவிர அனைவரையும் முட்டாள்கள் போல் நினைத்துக்கொள்வது என அதிமேதாவித்தனங்கள் இவர்களது செயல்களில் மேலோங்கி இருக்கும். இதுபோன்றவர்களின் தவறினைப் பிறர் எடுத்துச் சொன்னாலும் காதில் வாங்கிக்கொள்ளாமல், பதிலுக்கு வாதம் செய்வார்கள். தாங்கள் எப்போதுமே நூறு சதவிகிதம் சரியானவர்கள் என்பதுபோல காட்டிக்கொள்வார்கள்.

சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் என்பது அதிகபட்ச அன்பினால் உண்டாகிறது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். பொசசிவ் குணத்திற்கும் ஆதிக்க மனநிலைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. தனக்குச் சொந்தமான ஒன்றோ ஒருவரோ, பிறரை விட தங்களிடத்தில் அதிக நெருக்கமாக அன்பாக இருக்க வேண்டும் என்றும், தன்னை விட்டு யாரும் தனியே பிரித்து விடக் கூடாது என்ற மனோபாவமும் தனக்குரிய முக்கியத்துவத்தை அதிகம் எதிர்பார்க்கும் குணமும் அக்கறையும் பொசசிவ் எனலாம். இதற்கும் சந்தேக குணத்திற்கும் நூலிழையே வித்தியாசம். 

அதைப் புரிந்துகொண்டால் நலம். ஆனால் ஆதிக்க மனப்பான்மை என்பது இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. “தான்“ என்ற அகந்தை இதில் மேலோங்கி இருக்கும். அடுத்தவர்பற்றி, அவர்களுடைய விருப்பம், வலி பற்றி சிந்திக்கத் தோணாது.. இதில் அன்பு காதல் என்பதை விட அடக்குமுறைகள் தான் அதிகம் இருக்கும். பெரும்பாலான நட்பு வட்டத்தை இந்த மனநிலை சுருங்கச் செய்துவிடும்.

அதோடு மட்டுமல்லாமல் குடும்ப உறவுகளில், குறிப்பாக கணவன்-மனைவி உறவில் பெரிதளவில் விரிசல் உண்டாக்கிவிடும். விட்டுக்கொடுப்பதென்பது இருபக்கமும் இருத்தல் வேண்டும். எப்போதும் ஒருவரே விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பின் ஒருவித சலிப்பு ஏற்பட்டு வாழ்க்கை கசந்துவிடும். தங்களுக்குள் உள்ள ஈகோ குணத்தை விட்டுவிட்டு, ஆதிக்கமோ தாழ்வோ.. எந்தவித மனநிலையும் இல்லாமல் ஒருவருக்கொருவர் தங்களது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மனம் திறந்து பாராட்டப் பழக வேண்டும். தவறு செய்திருப்பின், மனதார மன்னிப்புக் கேட்க முன்வரவேண்டும். கேட்கப்படும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு எந்தவொரு சூழலிலும் குத்திக்காட்டாமல் சகிஜநிலைக்குத் திரும்ப வேண்டும்.

உறவுகளுக்கிடையே சரியான புரிதல்கள் இருந்தாலே வாழ்க்கை மிகைப்படுத்தாத யதார்த்தமாகிவிடும்.

புரிதல்களுடனான வாழ்வைப் பெற வாழ்த்துக்கள்.
.
.
கழுகு வலைதளத்திற்கு நன்றிகள்..

Related Posts Plugin for WordPress, Blogger...