Thursday, 29 March 2012

தவறுகளை ஒத்துக்கொள்ளப் பழகுவோம்..
மன்னிப்புக் கேட்பது பற்றி இதற்குமுன் ஒரு பதிவுல எழுதியிருந்தேன்.. நான் பார்த்தவரைக்கும் மனதார தங்களுடைய தவறுகளை ஒத்துக்கொள்வோர் மிக மிகக் குறைவுனு சத்தியமே செய்யலாம்.
ஏனோ தெரியல... இந்தப் பழக்கம் மட்டும் பெரும்பாலானவர்களிடம் இருக்குறதே இல்ல.. ஒரு தப்பு பண்ணிட்டோம்னா, அதை செய்யும்போது இருக்குற தைரியம், ஒத்துக்கும்போது இருக்குறது கிடையாது. யாராவது சுட்டிக்காட்டினாலும் வீண் வாக்குவாதம் செய்கிறார்களே ஒழிய பணிந்து போகும் பழக்கம் இருப்பதே இல்ல. தன்மேல் குறை சொல்லிட்டாங்களே.. என்று ஆதங்கப்படுறவங்களே இங்கு அதிகம். இதில் அவர் இவர் என்று பாரபட்சம் இல்லாம நான் உட்பட பல சமயங்கள்ல வாக்குவாதம் செய்ததுண்டு. (என்னையும் சொல்லிகிட்டேன்.. இப்ப சந்தோசமா??)
என் நட்பு வட்டாரங்களில் இது மாதிரி பலரைப் பார்த்திருக்கேன். ஏதாவது தவறு செஞ்சிருந்து, அதை சுட்டிக்காட்டிய சந்தர்ப்பங்களில், அவங்களோட வாக்குவாதங்கள் முற்றிப்போய் பிரிவு வரைக்கும் கொண்டுவந்து விட்டிருக்குது. வாதம் எந்த விளிம்புக்குப் போனாலும்கூட “நீ சொல்றதும் சரிதான்.. இது என்னுடைய தவறுதான். மன்னிச்சிடு“ என்ற வார்த்தை வாயிலிருந்து வரவே வராது.
ஒரு சிலர் இருப்பார்கள்.. ஆமா.. தப்புதான் பண்ணிட்டேன். அதுக்கு இப்ப என்னாங்குற??“ என்று தெனாவெட்டா கேட்பாங்க. காதைச் சேர்த்து அறையலாம் போல கோவம் வரும். இதற்குப் பெயர் ஒத்துக்கொள்வதில்லை. திமிர்.. “தான்“ என்ற அகம்பாவம்.. இது பிரிவுகளை இன்னும் அதிகமாக்குமே தவிர குறைக்க வழி செய்யாது.
இவர்களையெல்லாம் மிஞ்சும் வகைல ஒரு சிலர் இருப்பாங்க.. தங்களோட தவறினை யார் சுட்டிக் காட்டுகிறார்களோ அவங்களோட, என்னைக்கோ ஒருநாள் பண்ணின தவறை.. அதுவும் முடிந்த போன ஒரு விஷயத்தை தோண்டித் துருவி “அன்னைக்கு அப்படி செஞ்சியே.. நீ மட்டும் பெரிய ஒழுங்கா??என்று திரும்ப கேள்வி எழுப்பித் தப்பிக்கப் பார்ப்பாங்க.
தவறு செஞ்சிருந்தா, அது சுட்டிக்காட்டப்படும்போது அதை ஏற்றுக்கொண்டு ஒத்துக்கொள்வதில் என்னா ஆகப்போகுது??? தலையில் இருக்கும் கிரீடம் கழன்று கீழ விழுந்துடும்போல..
நண்பர்களுக்குள்ள, நேசிக்கிறவங்களுக்குள்ள இந்த மாதிரி ஈகோ பார்ப்பது, யாருக்கும் பணிய மாட்டேன்.. நான் செய்வது சரியே.. என்பது போன்ற மனோபாவங்கள்  ரொம்பவே திருத்திக்கொள்ளவேண்டிய விஷயம். நாளாக நாளாக இது விரிசலை கொண்டு வந்துடும். நானா நீயா“னு போட்டி வந்து ஒரு வித சலிப்பைக் கொண்டுவரலாம்.
மிகச்சாதாரண காரணங்கள் என நினைக்கப்படும் சம்பவங்களே பெரிய பெரிய முடிவுகளுக்கு ஆதாரமாய் அமையும்..
ஜாக்கிரதை..
.
.

Monday, 26 March 2012

எல்லோர்க்கும் ஏதாவதொரு..
எல்லோருக்கும் ஏதாவதொரு கோழைத்தனம்
இருக்கத்தான் செய்கிறது..
தூக்கு மாட்டியவன் ஊன்று முயன்று
தோற்றுப்போன பெருவிரல் போல...

எல்லோருக்கும் ஏதாவதொரு நம்பிக்கை
இருக்கத்தான் செய்கிறது..
வெளிச்சென்ற மூச்சு அடுத்த நொடி
உள்வரும் என்பதைப் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு ஏமாற்றம்
இருக்கத்தான் செய்கிறது..
சப்பி வந்த குச்சி மிட்டாயைத் தவறவிட்ட
குழந்தை மனம் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு சந்தோசம்
இருக்கத்தான் செய்கிறது..
ஒப்பாரியின் நடுவிலும் கவனம் ஈர்க்கும்
மழலைச் சிரிப்பு போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு கோபம்
இருக்கத்தான் செய்கிறது..
இயலாமையின் போது கண்ணாடிமுன்
திட்டிக்கொள்ளும் ஆற்றாமை போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு காதல்
இருக்கத்தான் செய்கிறது..
அடைத்த கதவின் இடுக்கிலும் கசியும்
சாரல் மழை போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு வெறுமை
இருக்கத்தான் செய்கிறது..
புறப்பட்ட பயணத்தில் பெறப்பட்ட
கடைசி கையாட்டல் போல..

எல்லோருக்கும் ஏதாவதொரு காரணங்கள்
இருக்கத்தான் செய்கிறது..
வாழ்வின் நொடிகளை நகர்த்துவதற்கான
சமாளிப்பு நடிப்புகள் போல..
.
.

Thursday, 15 March 2012

“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..பெண்களா...?? சதைப்பிண்டங்களா..??
(“கழுகு“ வலைதளத்தில் வெளியான என்னுடைய பதிவு..)
என் அலுவலகத்தில் இரண்டு நாளைக்கு முன் ஆடிட் நடந்தது. சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழு வந்திருந்தனர். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். நடுத்தர வயதுடைய, மதிக்கத்தக்க தோற்றத்துடையவராய் தெரிந்தார். அன்று அலுவலகம் முழுவதுமே காலையிலிருந்தே பரபரப்பாய் இருந்தது. எல்லா ஃபைல்களையும் பரிசோதித்து ஒவ்வொன்றாக சரிபார்த்தனர். அதிலிருந்த சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்தனர். அந்தப் பெண்மணி கொஞ்சம் கோபப்படுபவர் போல.. தாள்களில் இருந்த தவறுகளை எடுத்துக்காட்டி திட்டிக்கொண்டிருந்தார். பின் ஒருவழியாக ஆடிட் முடிந்து ரிப்போர்ட் கொடுத்தாயிற்று.
இதெல்லாம் எல்லா அலுவலகத்துலயும் நடக்குறது தானேனு நெனைக்கலாம். நான் சொல்ல வந்தது அன்று நடந்தது பற்றியல்ல.. அவர்கள் சென்றபின் வந்த அடுத்தநாள் பற்றியது. ஆடிட் முடிந்த மறுநாள் மதியம் எல்லா பணியாளர்களும் அவரவர் கேபின்களில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பணியாளர் மெதுவாக ஆடிட் பற்றி பேச்செடுக்க, பின் அதுபற்றி உரையாடல் தொடர்ந்தது. நானும் இன்னொரு மேடமும் பக்கத்து கேபினில் அமர்ந்திருந்த்தை அவர்கள் கவனிக்கவில்லையா அல்லது சட்டை செய்யவில்லையா என்பது தெரியாது. அவர்கள் பேசியதிலிருந்த முக்கியமான பேச்சுகள் இது தான்...
நேத்து ஆடிட்ல பயங்கர தீணி போல.. அந்த நீலாம்பரி செம கட்டையா இருக்காளே..
ஆம்பளைங்க நாம இருக்கும்போது அவ என்னமா கத்துறா பார்த்தியா? திமிரு ஜாஸ்தி..
திமிர விடுடா.. அவ ஸ்ட்ரக்ச்சர் சூப்பர்ல.. இந்த வயசுலயும் சிக்குனு இருக்கால்ல.. இத்தனை நாள்ல எத்தன பேரு மடங்குனாய்ங்களோ.. ம்ம்ம்..
அடப்போடா.. இவ இப்டி கோவமா கத்திகிட்டே இருந்தா புருஷன் கூட பயப்புடுவான்
அட நீ வேற.. இந்த மாதிரி பொம்பளைங்க தான்டா சீக்கிரம் மசிஞ்சிடுவாளுக.. நீ வேணும்னா பாரு.. ரெண்டு தடவை பேசினா போதும்.. ஈசியா முடிச்சிடலாம். எழுதி வச்சுக்க..
இன்னும் சிரிப்பொலியும் கேவலமான பேச்சுக்களும் நீண்டுகொண்டே போனது. எல்லாமே அந்தப் பெண்ணைப் பற்றியது தான். நான் பொறுக்க முடியாமல் அவர்களைத் திட்டுவதற்கு எழுந்தேன். உடனே என் பக்கத்தல் அமர்ந்திருந்த ஒரு மேடம், என் கையைப் பிடித்து இப்ப நீ திட்டிடலாம், அவங்களும் அமைதியாயிடுவாங்க. ஆனா கொஞ்ச நேரம் கழிச்சு உன்னைப் பத்தி இதே மாதிரி பேச ஆரம்பிச்சிடுவாங்க.. நா நிறைய அனுபவப்பட்ருக்கேன். பேசாம இரு. அது தான் நல்லதுனு குரல் தாழ்த்தி சொன்னாங்க. இதைக் கேட்டதும் நான் என்ன செய்ய முடியும்? எழுந்து வெளிய போய் விட்டேன்.
பெரும்பாலும் பெண்கள் பற்றி, வெளியுலகத்தில் ஆண்கள் பேசுவது இப்படித்தான். ஒரு சிலர் வேண்டுமானால் நான் ரொம்ப ஜென்டில் மேன்னு காலரைத் தூக்கி விட்டுக்கலாம். ஆனா நாலைந்து ஆண்கள் சேர்ந்துட்டா அவங்களோட பொழுதுபோக்கு பேச்சுக்கள் இப்படித்தான் இருக்கு. பொழுதுபோக்காக, விளையாட்டாக, சும்மா, சகஜம்.. என்று ஆயிரம் அர்த்தங்கள் சொன்னாலும் இது போன்ற பேச்சுக்கள் ஆண்களோட வக்கிரத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் காட்டுவதோட மட்டுமில்லாம குறிப்பிட்ட பெண் மீது அவர்களுக்கு இருக்கிற பொறாமை குணத்தையும் அப்பட்டமா காட்டுது.
பொதுவாகவே பெண்கள் என்றாலே வெறும் சதைப்பிண்டங்களா தான் பார்க்கப்பட்றாங்க. ஒரு பெண்ணைப் பார்க்கிற ஆணோட பார்வையே இதை சொல்லிடும். ஏற இறங்கப்பார்க்கும் கீழ்த்தரமான பார்வைக்கும் முகத்தை மட்டும் பார்க்கும் பார்வைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இவர்கள் ஸ்ட்ரக்ச்சர்என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தமே கொண்டுவந்துவிட்டனர். பொதுவாய் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் என்னதான் இழுத்துப்போர்த்திக்கொண்டு வந்தாலும் ஆண்களின் பார்வைகள் தவறான இடங்களைத் துலாவுவதை தவிர்க்க முடிவதில்லை.
நண்பர் ஒருத்தரோட வலைப்பூவில் பெண்களுக்கு இணையத்தில் கொடுக்கப்படும் மதிப்பைப் பற்றிய விவாதம் நடந்தது. அதிலும் கூட, நிறைய ஆண்கள் தங்களோட அதிகார குணத்தை வெளிப்படுத்தியிருந்தார்கள். இணையத்தில் பெண்களின் பங்களிப்பு ஆண்களுக்கு நிகராக இருப்பதில்லை என்ற பேச்சில் தொடங்கி, எங்கெங்கோ வாதம் சென்றுவிட்டது. அதிலும் ஒரு சிலரோ பொண்ணுங்களுக்கு ஒண்ணுமே தெரியாது, கத்துக்குட்டிங்க.. உடல்லயே ஆணுக்கு சமமா இருக்குறது கிடையாது. இதுல எங்க சமுதாயத்துல சமமா இருக்கப்போகுதுங்க..என்று சம்மந்தமில்லாமல் என்னென்னவோ பினாத்தினார்கள். சமூகத்தில் சமநிலை என்பதும் உடலில் சமநிலை என்பதும் ஒன்றில்லையே.. மட்டப்படுத்துவதே நோக்கமாக கொண்டிருப்பதால் எதுவேண்டுமானாலும் பேசலாம் போல.
என்னதான் நட்பாகப் பேசினாலும், குறிப்பிட்ட பெண்ணின் போன் நம்பர் கிடைத்துவிட்டதைப் பெருமையாக தம்பட்டம் அடிக்கும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதைவிட, அந்த நம்பரை தனக்கும் தரும்படி கெஞ்சும் ஆண்களும் இருக்கிறார்கள். தினமும் அந்தப் பெண்ணிடம் என்ன பேசப்பட்டது என்று பகிரப்படுவதும் பெரும்பாலான ஆண்களின் நட்பு வட்டாரத்தில் வழக்கமாக இருப்பதுண்டு.
ஆண்களின் நோக்கங்களுக்கேற்ப நடக்கும் பெண்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதில்லை. கண்ணியமான, சாதாரண நட்புடன் பழகும் பெண்களையும் கூட இந்த நோக்கத்தில் தான் பெரும்பாலும் பார்க்கின்றனர்.
அது போன்ற ஆட்களிடம் உன் தாயும் பெண்தானேஎன்று பழைய்ய்ய்ய வசனமெல்லாம் பேசமுடியாது. தண்ணி தெளித்து, தவிர்த்து தான் விடமுடியும்.
பெண்பால் மீதான ஆணின் இனக்க்வர்ச்சி இயற்கையின் ஏற்பாடாயினும் அது அவ்விதமாக இல்லாமல் தனக்குக் கிடைக்கவில்லை என்ற ஆற்றாமையின் வெளிப்பாடாக, வக்கிரமாக, விரசமான வார்த்தைகளாக, வந்து விழுவதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது
பெண்கள் என்பவர்கள் வெறும் சதைகள் மட்டுமல்ல. ஆண்களைக் கவரும் வஸ்த்திரமும் அல்ல. தங்களுடைய வக்கிரங்களையும் அதிகாரங்களையும் திணிக்க ஏதுவாக இருக்கும் பிராணிகளும் அல்ல. அவர்களும் உணர்வுகள் இருக்கும் சாதாரண மனிதர்கள் என்ற பார்வை நம் சமூகத்தில் இருப்பதேயில்லை. இந்த நிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை.
.

Tuesday, 13 March 2012

மின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)படத்துக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லீங்கோ...
நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் விளக்குகளையே பயன்படுத்தி ஒளி பெற்று வந்தார்கள். பட்டனைத் தட்டியதும் பல்பு எரியக்கூடிய மின்சாரம் அப்போது கிடையாது. இப்போதோ ஏராளமான வடிவங்களில் மின்சார விளக்குகள் நமது வாழ்க்கையில் பயன்படுகின்றன. தொழிற்காலைகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் எல்லாமே மின்சாரத்தினால் இயக்கப்படுகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ரயில், விமானம், தண்ணீர் இறைக்கும் மோட்டார் போன்ற முக்கியமானவை எல்லாமே மின்சாரத்தின் பயனால் உருவானவையே. மனித குலமான நமக்கு மின்சாரம் ஒரு வரப்பிரசாதமாகும்.
மின்சாரத்தை உண்டாக்கும் இயந்திரத்தை டைனமோஅல்லது “ஜெனரேட்டர்என்று கூறுகிறார்கள். இதில் பெரியதும், சக்தி வாய்ந்ததுமான காந்தம் உள்ளது. இந்த காந்த்த்தை “புலக் காந்தம்“ (Field Magnet) என்று வழங்குகிறார்கள். புலக் காந்த்த்தின் இரண்டு உலோக வளையங்களால் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வளையங்கள் வெளியேயுள்ள கார்பன் துண்டு ஒன்றைத் தொட்டுக் கொண்டிருக்கும்.
டைனமோவில் உண்டாக்கப்படும் மின்சாரத்தை எடுத்துச் செல்லும் கம்பிகள் கார்பன் துண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். முன்னரே கூறியபடி செம்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நீளமான, சதுர வடிவிலான கம்பி, காந்த்த்தின் இரண்டு முனைகளுக்கு இடையிலே சுழலும்போது மின் காந்த்த் தூண்டல் (Electro Magnetic Induction) ஏற்பட்டு இதன் காரணமாக மின்சாரம் உற்பத்தியாகிறது. இப்படி உற்பத்தியாகும் மின்சாரம், உலோக வளையங்களைத் தொட்டுக் கொண்டிருக்கும் கார்பன் துண்டு வழியாக மின்சாரக் கம்பிகளில் பாய்கிறது. இந்தக் கம்பிகளை நமது வீடுகள் அல்லது தொழிற்சாலைகள் வரையிலும் இணைத்துக் கொண்டு நாம் மின்சாரம் பெறுகிறோம்..
டைனமோவில் செம்புக் கம்பிச் சுருளை சுழலச் செய்ய இரண்டு முறைகள் உள்ளன. முதல் முறையின்படி ஆறுகளின் நடுவே அணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி, தோக்கிய தண்ணீரை மிகவும் உயரமான இடத்திலிருந்து கீழே விழச் செய்கிறார்கள். இந்த நீர் டர்பைன் பிளேடுகளில் விழுந்து, டர்பைன் சுற்றி, இதன் மூலம் டைனமோவின் கம்பிச்சுருள் சுழலுகிறது. இதன் விளைவாக மின்சாரம் உண்டாகிறது. இந்த முறையில் செயல்படும் மையங்களை நீர் மின் நிலையங்கள் என்று அழைக்கிறார்கள்.
இரண்டாவது முறையின் படி நிலக்கரியை எரித்து நீரைக் கொதிக்க வைத்து, கிடைக்கும் நீராவியைக் கொண்டு டர்பைன் சுழலுகிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை அனல் மின்நிலையங்கள் என்று வழங்குகிறார்கள். இந்த இரண்டுவகையான முறைகள் தவிர அணுசக்தியைப் பயன்படுத்தியும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தவகையான நிலையங்களை அணுமின்நிலையங்கள் என்று கூறுகிறார்கள.
அதெல்லாம் சரி.. மின்சார தட்டுப்பாட்டை எப்படி சரிசெய்யுறதுனு யாராவது பதிவு போட்டீங்கன்னா சொல்லுங்க..
.
.

Tuesday, 6 March 2012

என் பள்ளி நாட்கள் - தொடர்பதிவு..தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் பிரகாஷ்க்கு நன்றி..
நாம எவ்ளோ தான் வாழ்க்கைல முன்னேறினாலும், நம்மளோட ஆரம்பகாலத்தை நெனச்சுப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். நாம இப்படியெல்லாம் இருந்திருக்கோமா?ங்குற கேள்வி நமக்குள்ள கட்டாயம் எழும். அது சில நேரம் சிரிப்பைத் தரலாம்.. சில சமயம் அழுகையை.. ஆனா அந்த நினைவுகள் என்னைக்கும் நம்ம மனசை விட்டு நீங்குறது இல்ல.
அப்படிப்பட்ட நினைவுகள்ல நம்மளோட பள்ளிக் கால வாழ்க்கைக்கு பெரும்பங்கு உண்டு. இன்னைக்கும்.. என்னைக்கும் பசுமையான நாட்களா நமக்குள்ள இருந்துகிட்டே இருக்கும். நண்பர் பிரகாஷ் மாதிரி, வகுப்பு வாரியா பிரிச்சு சொல்ல முடியாதுனாலும் என்னோட பள்ளி வாழ்க்கைல குறிப்பிடக்கூடிய ஒரு சில நிகழ்வுகள் இங்கே...
1. இப்ப நா இருக்குறது மதுரையானாலும், எனக்கு சொந்த ஊர் திண்டுக்கல் தான். அங்க இருக்குற சென் ஜோசஃப் மெட்ரிக்குலேசன்ல தான் எல்கேஜில இருந்து ஐந்தாம் வகுப்பு வரைக்கும் படிச்சேன். ஐந்தாவது படிக்கும்போது தான் அப்பா முதன்முதலா சைக்கிள் வாங்கி குடுத்தாரு. என்னதான் நான் தனியா சைக்கிள்ல போனாலும் அப்பா இன்னொரு சைக்கிள்ல பின்னாடியே வந்து விட்டுட்டுதான் போவாரு. “சூப்பரா படிப்பேன்.. க்ளாஸ் பர்ஸ்ட்“னு எல்லாம் சொல்ல முடியாது. ஆனாலும் நல்லா படிப்பேன்.
2. அம்மா படிப்பு விசயத்துல ரொம்ப கண்டிப்பு. நானும் நல்லாவே படிப்பேன். ஆனா அஞ்சாவது படிக்கும்போது ஒரு தடவை க்ளாஸ் டெஸ்ட்ல பதில் தெரியாம, நோட்ட திறந்து பார்த்து எழுதுனேன். அதை ரொம்ப பெருமையா வீட்ல சிரிச்சுகிட்டே சொல்லி அடிவாங்கினேன். அது தான் முதலும் கடைசியுமா நா அடிச்ச பிட்.
3. ஆறாவது வகுப்புலயிருந்து சென் ஜோசஃப் பெண்கள் மேல்நிலைப் பள்ளில படிச்சேன். இங்கிலிஷ் மீடியம் சீட் கிடைக்கலனு வேற வழியில்லாம தமிழ் மீடியத்துல சேர்ந்தேன். எனக்கு ஆங்கிலம் நல்லாவே வரும்.. அந்த சப்ஜெக்ட்ல மட்டும் எப்பவும் க்ளாஸ் பர்ஸ்ட்டா வருவேன்.. வாய்ப்பாடு கூட தமிழ்ல சொல்லத் தெரியாது.. அதுனாலயே ஏதோ வேற்றுகிரகவாசிய பார்க்குறது மாதிரி மற்ற மாணவிகள் பார்ப்பாங்க. ஆரம்பத்துல தயங்கினாலும் அப்புறம் சகஜமாயிடுச்சு..
4. இடையிடையே யோகா, பாட்டு க்ளாஸ்னு முந்திரிக்கொட்டைத் தனமா சேர்ந்துடுவேன்.. அப்புறம் அம்மா திட்டுறாங்கனு விலகிடுவேன்.. நான் உயரமா இருக்கேன்னு பாஸ்கட்பால் விளையாட்டுல என்னோட சம்மதமே இல்லாம சேர்த்துட்டாங்க. அந்த கோச் மாஸ்டரைப் பார்த்தாலே எனக்கு பயம். யூனிபார்ம், ஸ்போர்ட் ஷூ எல்லாம் கேட்டாங்க.. வேற ஊருக்கு போய் விளையாடணும், சாயந்திரம், லீவ் நாள்ல எல்லாம் ப்ராக்டீஸ் பண்ணனும்னு சொன்னாங்க.. ஓவரா வெயில்ல விளையாடுனதாலயும் பயத்துனாலயும் காய்ச்சலே வந்துடுச்சு.. அப்புறம் அப்பா வந்து ஆசிரியர் கிட்ட எடுத்துசொல்லி விலக வச்சுட்டார்.
5. ஏழாவது எட்டாவதுக்கப்புறம் தோழிகள் நிறைய சேர்ந்துட்டாங்க. ப்ளஸ்டூ வரைக்கும் எனக்கு அம்மா குடுக்குற டெய்லி பேட்டா ஒரு ரூபாய்.. (அதையும் செலவு பண்ணாம சேர்த்து வைப்பேன். இப்ப இருக்குற குட்டீஸ்ங்க அசால்ட்டா பத்து ரூபாய் அம்பது ரூபாய்னு கேக்குதுக.. நெனச்சா சிரிப்பு தான் வருது.). அதுனால செலவுன்னு வந்துட்டா நா எஸ்கேப் ஆய்டுவேன். யாருக்காவது பிறந்தநாள்னா கூட அஞ்சு ரூபாய் க்ரீட்டிங் கார்டோட முடிச்சிடுவேன்.
6. கணிதம், அறிவியல்னா கஷ்டமா இருக்கும்.. கம்ப்யூட்டர் காமர்ஸ் எடுக்கலாம்னு கும்பலோட முடிவு பண்ணி பதினோராம் வகுப்பு சேர்ந்தேன். ப்ச்... அங்கயும் அக்கவுண்ட்ஸ்.. ஆனாலும் அரட்டைக்கு பஞ்சமேயில்ல. சினிமா ஹீரோக்கள் படமெல்லாம் சேகரிச்சு ஸ்கூல் பேக்ல வச்சுகிட்ட காலம் அது.
7. பள்ளி வாழ்க்கையோட கடைசி வருஷம் மறக்கவே முடியாது. ப்ளஸ்டூ ப்ப்ளிக் எக்ஸாம்னால கெடுபிடி ஜாஸ்தி.. எப்பபார்த்தாலும் படி.. படி.. படி..னு உயிர வாங்கிட்டாங்க. ஆனாலும் படிக்குறது, சைட் அடிக்கிறது, தோழிகளோட அரட்டை, வீட்டுக்கு தெரியாம ப்ரெண்ட்ஸ் கூட ஒரு சினிமா பார்த்ததுனு நிறைய அனுபவம் அந்த வருஷத்துல கிடைச்சுச்சு.
8. அப்புறம் வழக்கமா வர்ற ஃபேர்வெல்-டே நிகழ்ச்சி.. வழக்கமான அழுகை.. வாழ்க்கைல நாம உணர்ற முதல் பிரிவாச்சே.. அதுக்கப்புறம் பிரிவுகள் சகஜமாய்டுச்சு.. எக்சாம் ரிசல்ட் வந்ததுக்கப்புறம் எல்லாரும் சேர்ந்து எல்லாருடைய வீட்டுக்கும் போய்ட்டு வந்தோம். அதுக்கப்புறம் போக வாய்ப்பு கிடைக்கவேயில்ல.
நாட்கள் செல்லச் செல்ல, பள்ளி நட்புக்களோட பிடிமானங்கள் குறையத் தொடங்கி, எங்கயாவது எப்போதாவது, முகம்பார்த்தா மட்டும் ஒருத்தரையொருத்தர் விசாரிக்குற நிலை வந்தாச்சு. அடுத்தடுத்து வந்த மாற்றங்களால புதுப்புது நட்புகள் கிடைச்சாலும் ஆரம்பகால நட்புக்களை மறக்கவே முடியாது. இன்னைக்கும் தோழிகளோட ஆட்டோகிராஃப் டைரிய படிச்சுப் பார்க்கும்போது சந்தோசமும் துக்கமும் கலந்த ஒருவித உணர்வு உருவாவதுண்டு.. அது வார்த்தைகளால விவரிக்க முடியாதது. இந்தப் பதிவை தட்டச்சு செய்யும்போதும் கூட அந்த வலி உண்டாவதை தவிர்க்க முடியல.
இன்னும் ஏராளமான நிகழ்வுகள் பள்ளிக்காலத்தில் இடம்பெற்றதுண்டு.. ஆனாலும் இந்தப் பதிவை முடிக்கிறேன்.. வலியுடன்..
.
(ஏற்கனவே நிறையபேருக்கு இந்த தொடர்பதிவை எழுத அழைப்பு விடப்பட்டிருக்கும். அதுனால நா யாரையும் அழைக்கல..)

.
Related Posts Plugin for WordPress, Blogger...