Tuesday, 31 May 2011

எனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...
நா வேலைக்கு சேர்ந்த புதுசுல பஸ் பாஸ் எடுக்கலாம்னு, கூட வேலை பாக்குற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் முடிவு பண்ணிருந்தோம். வேலை பாக்குற கம்பெனில இருந்து ஒரு சான்றிதழும் போட்டோ ரெண்டும் கொண்டு போகணும்னு, தெரிய வந்துச்சு. ஆபீஸ்ல அந்த சான்றிதழ, தனித்தனியா முந்தின நாளே வாங்கி வச்சுகிட்டோம். அன்னைக்கு சாயந்திரம் எல்லாரும் பேசிவச்சு, மறுநாள் காலேல பத்து மணிக்கு பாஸ் எடுக்குற எடத்துக்கு போய்டலாம்னு சொல்லி வச்சிருந்தோம். அதுல ரெண்டு பேர் வரமுடியாதுனு சாக்கு சொன்னாங்க. நான் தான் அவங்கள திட்டி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து போய்ட்டு வரலாம்னு அட்வைஸ் பண்ணி சம்மதிக்க வச்சேன். சரின்னு சொல்லிட்டாங்க.
போட்டோ மட்டும் ரெண்டு வேணும். நான் ஏற்கனவே பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வச்சிருந்த ஞாபகம்.. அதுனால வீட்ல போய் தேடிப் பார்த்தேன். கரெக்டா ரெண்டு போட்டோ இருந்துச்சு. அப்பாடானு எடுத்துவச்சுகிட்டேன்.
மறுநாள் காலேல 9 மணி இருக்கும்.... கிளம்பி ரெடியாயிட்டு மத்தவங்களுக்கு போன் செஞ்சேன். பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்புக்கு வந்துட்றதாவும் அப்புறம் பஸ் பிடிச்சு பஸ் ஸ்டாண்ட் போய்டலாம்னும் சொன்னாங்க. என் வீடு பஸ் ஸ்டாப் பக்கத்துலங்குறதுனால அவங்க வந்ததுக்கப்புறம் போகலாம்னு முடிவு பண்ணி வெய்ட் பண்ணேன்.
சும்மா இல்லாம அந்த ரெண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவையும் எடுத்து பாத்துகிட்டு இருந்தேன். நா அதோட விட்ருக்கலாம். விதி யாரை விட்டுச்சு?
போட்டோவுக்கு கீழ கொஞ்சம் இடம் காலியா இருந்துச்சு. அதாவது ரெண்டு போட்டோலயும் கீழ இருந்த வெள்ளை அட்டைய சரியா வெட்டாம விட்ருந்தாங்க. சும்மா தான இருக்கோம், அத சரியா வெட்டலாம்னு நெனச்சு, ரெண்டு போட்டோவையும் சேர்த்து வச்சு கத்திரிக்கோல எடுத்து நரிச் நரிச்சுனு அழகா வெட்டினேன். எல்லாம் நல்லாதான் போய்கிட்டு இருந்துச்சு. அப்புறம் தான் தெரிஞ்சுச்சு.. பின்னாடி இருந்த ரெண்டாவது போட்டோ தலைகீழா இருந்துருக்கு... (அவ்வ்வ்வ்வ்வ்)
என்னோட பாதி நெத்தி வரைக்கும் அழகா வெட்டி எடுத்திருந்தேன். அவ்ளோ தான்... எனக்கு என்ன பண்றதுனு தெரில. வேற போட்டோவும் இல்ல. மத்த ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொன்னா வீணா அடிதான் விழுகும். ஏன்னா, வரமாட்டேன்னு சொன்ன ரெண்டு பேர மானக்கேடா திட்டி, நான் தான் வரவச்சேன். வெட்டினத எதையாவது வச்சு ஒட்டலாம்னாலும், அத பாஸ் எடுக்குற எடத்துல வாங்க மாட்டாங்க. இன்னும் பதினஞ்சு நிமிசத்துல பஸ் ஸ்டாப்ல இருக்கணுமே.. என்ன பண்ணித் தொலைக்கிறது? அந்த ஸ்டுடியோ, வீட்டுக்கு பக்கத்துல தான் இருந்துச்சு. அதுனால அந்த போட்டோவுக்குரிய கவர்ல, ஸ்டுடியோல குடுத்த கம்ப்யூட்டர் நம்பர் இருந்துச்சு, அத எடுத்துகிட்டு அவசரமா போனேன். உடனே வேணும், கொஞ்சம் ப்ரிண்ட் போட்டுக் குடுங்கனு சொன்னேன். பயபுள்ள, பணம் டபுளா வேணும்னு எகத்தாளமா பேசினான். வேற வழியில்லாம குடுத்து அவசரமா வாங்கிட்டு வந்தேன்.
பஸ் ஸ்டாப்புக்கு, நா வரவும் மத்தவங்க வரவும் நேரம் கரெக்டா இருந்துச்சு. ஒண்ணுமே நடக்காத மாதிரி எல்லாரோடயும் கிளம்பிப் போனேன். மனசுக்குள்ள தப்பிச்சுட்டோம்டானு தோணுச்சு.
பாஸ் எடுக்குற இடத்துக்குப் போய் க்யூ“வுல நிக்கும்போது தான் தெரிஞ்சுச்சு, எல்லாரும் ஸ்டாம்ப் சைஸ் போட்டோ கொண்டு வந்திருந்தாங்க. நா மட்டும் தான் பாஸ்போட் சைஸ் கொண்டு வந்திருக்கேன். (அவ்வ்வ்வ்வ் ஸ்டாம்ப் சைஸே தான் வேணுமா..???)
இது கூட தெரியாதா?ங்குற மாதிரி பாத்தவங்கள கண்டுக்காம, அசடு வழிஞ்சுகிட்டே, மறுபடியும் பக்கத்துல இருந்த ஸ்டுடியோவ தேடிக் கண்டுபிடிச்சு அந்த போட்டோவ குடுத்து, ஸ்டாம்ப் சைஸ் பிரிண்ட் போட்டு எடுத்துகிட்டு வந்தேன். அந்தப் பயபுள்ளயும் பத்து ரூபாய் அதிகமா வாங்கிட்டான்.
ஒரு வழியா அத குடுத்து பஸ் பாஸ் எடுத்துட்டு வந்துட்டேன். ஆனா இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா??? மறுநாள் ஆபீஸ் போனதுக்கப்புறம் தான் ஒரு தகவல் தெரிய வந்துச்சு.. ஸ்டாஃப் பஸ் (Staff Bus), ஆபீஸ்ல இருந்து ஏற்பாடு பண்ணிட்டாங்கனு.. என்ன கொடுமை சார் இது??? (அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)
இன்னமும் அந்த உபயோகப்படுத்தாத பஸ் பாஸையும், தலை வெட்டப்பட்ட என்னோட போட்டோவையும் பத்திரமா வச்சிருக்கேன். பல்பு வாங்கினதுக்கு கெடச்ச அடையாளச் சின்னம்ல..
.
.

Thursday, 26 May 2011

விழித்தூண்டில்..உன் விழித்தூண்டிலில் மாட்டிக்கொண்டது
என் இதயம்..
உனக்காக எனும்போது துடிக்க மட்டுமல்ல..
வெடிக்கவும் தயங்காமல்..!


Thursday, 12 May 2011

கிளையுதிர்காலம்..

சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறேன்..
உன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.

சிரிப்பெனும் முகமூடி அணிந்து
என்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன் தெரிந்தே..
எந்தக் காதலும் திருமணத்தில் தான் முடியும்.
ஆம்!
என் காதலும்.. உன் மணத்தில்.

வசனங்களில் முலாம் பூசினாலும்
வார்த்தைகளில் வலி உணர்கிறேன்.
எனக்கான கிளையுதிர் காலம் எப்போதோ?

காட்டி கொடுத்து விடாதே என்று
கண்ணாடியில் கூட நினைவுறுத்திக் கொள்கிறேன் கண்களை.

பக்குவப்படாத உன் வார்த்தைகளில் தான்
எத்தனை எத்தனை எதிர்பார்ப்புகள் ??
சிறு பிள்ளையாய் நீ உரையாடும் ஒவ்வொரு நிமிடங்களிலும்
கரைந்து தான் போகிறேன்..
உன் கேள்விகளைத் தள்ளிப்போடும் எனக்கு
உன் கனவுகளை களைக்கும் தைரியம் இல்லை.

எத்தனையோ எதிர்காலக் கனவுகள் ..
அமைதியாய் உறங்குகின்றன.
நிறைவேறாத ஏக்கங்கள் என்ற பெயரில்.

எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்
எதிர்பார்ப்பதை நிறுத்தி விடலாமே..
வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
இது தான்.. இது மட்டும் தான்.

தயாராகிக் கொண்டிருக்கிறேன்
என்னவனின் முகம் அறியாத
அவளைப் பாராட்ட..
இல்லையா பின் ?
எவ்வளவு அதிஷ்டம் பெற்றவள்..

உன் விரல் கோர்த்து வழித்துணை வரவும்..
உன் காதோரம் ரகசியம் கொஞ்சவும்..
உன் செல்லச் சிணுங்கல்களை எதிர்கொள்ளவும்..
உன் சமாதானங்களில் சிக்கிக் கொள்ளவும்..
உன் கேசத்தை கோதி விடவும்..
உன் தோள்களில் சாய்ந்து கொள்ளவும்..
உன் மடியில் படுத்து அளவும்..
உன் கனவுகளில் பங்கேற்கவும்..
மொத்தத்தில் உன் காதலை முழுமையாகப் பெற்றுக் கொள்ள
கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.

காத்திருக்கிறேன் கைபிடிக்க..
உன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..
வாழ்த்துக்கள் சொல்வதற்கு.

முதலும் முடிவுமான உன் மீதான என் காதல்
எனக்குள்ளேயே புதைந்து போகட்டும்.
நினைவுகள் அசைபோட்டே வாழ்ந்துவிடுவேன்..
நிஜத்தில் வழக்கம்போல வெற்றுப் புன்னகை புரிந்தபடி.
.
.

Wednesday, 11 May 2011

சொர்க்கம்??? நரகம்???சொர்க்கம்...

ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல்

ஒருதலையாய்க் காதலித்துக்கொண்டிருக்கும்போது

இருவருக்கும், தற்செயலாய் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்படும்போது..

*************************************************

நரகம்..

ஒருதலையாய்க் காதலிக்கப்பட்டவள்,

தன் காதலனை நினைத்து அழுவதை,

அருகிருந்து மௌனமாய்ப் பார்க்கும் தருணம்..

.

.


Related Posts Plugin for WordPress, Blogger...