Thursday, 30 September 2010

பேனர் பைத்தியங்கள்..


முன்னெல்லாம் யாருக்காவது கல்யாணம் நடந்தா அவங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேந்து அங்கங்க செவுத்துல சின்னதா வாழ்த்து நோட்டீஸ் ஒட்டுவாங்க. சின்ன பேப்பர்ல வாழ்த்து செய்தி அச்சடிச்சு அதோட சாக்குலேட்ட பின் பண்ணி எல்லாருக்கும் தருவாங்க. ஆனா இப்ப ஃப்ளக்ஸ் பேனர் வந்தாலும் வந்துச்சு, காதுகுத்து, கல்யாணம்னு ஆரம்பிச்சு யாராவது மண்டையப் போட்டா கூட பெருசு பெருசா பேனர் வச்சிட்றாங்க.

இதுல என்ன கொடுமைனா, அந்த பேனர்ல ஒரு கும்பல் போட்டோவே இருக்கும். சம்பந்தப்பட்டவங்க யாரு, வாழ்த்துறவங்க யாருனே நமக்கு வௌங்க மாட்டிங்குது. என்னவோ சினிமால ஹீரோ சான்ஸ்க்கு ஆள் எடுக்குறமாதிரி ஸ்டைலா போஸ் குடுத்துட்டு நிப்பாய்ங்க. பெரிய பெரிய சோ்ல உக்காந்து, ஃபோன் பேசுற மாதிரி, ஏதோ உலக சமாதானத்துக்காக யோசிக்கிற மாதிரி, நகைக் கடை, டூத் பேஸ்ட் விளம்பரத்துல நடிக்கிற மாதிரினு பயங்கரமான ஸ்டில்ஸ் எல்லாம் வச்சிருப்பாய்ங்க. இவங்க நிக்கிறது மட்டுமில்லாம இவங்க வீட்டு குட்டீஸ் பட்டாளத்தையும் நிக்க வச்சிருப்பாய்ங்க. ஏதோ போனா போகுதுனு சம்பந்தப்பட்ட கல்யாண ஜோடிகளை ஒரு ஓரமா இத்துனூண்டா போட்ருப்பாங்க. பத்தாததுக்கு சினிமா ஹீரோக்களோட போட்டோவையும் பாதி பேனருக்குப் பெருசா போட்ருவாங்க. இதுக்கு நடுவுல யாருக்கு, எப்ப, எங்க கல்யாணம்னு தேட்றதுக்குள்ள விடிஞ்சிடுதுடு.

அதுலயும் அரசியல் சம்பந்தப்பட்ட விஷேசம்னா சொல்லவே வேணாம். தலைவன்ல ஆரம்பிச்சு உப தலைவன், செயலாளர், மேயர், உறுப்பினர், தொண்டன்னு மொத்த கட்சியில இருக்குறவங்களயும் அந்த பேனர பாத்தே தெரிஞ்சுக்கலாம். இதுல என்ன ட்விஸ்ட்டுனா, தலைவனோட இதயத்துலயும் காலடியிலயும் இருக்குற மாதிரி க்ராஃபிக்ஸ் எல்லாம் பண்ணிருப்பாங்க பாருங்க... ம்ம் பாசக்கார பயபுள்ளய்ங்களாம்.. அப்புறம் இந்த மாதிரியான ஃப்ளக்ஸ்ல அவங்க எழுதியிருக்குற வாசகங்கள் இருக்கே.. அட அட.. வாலி, வைரமுத்து கூட தோத்துப்போய்டுவாங்க. தமிழகத்தை காக்கவந்தவங்களாம், தென்னாட்டுச் சிங்கமாம், இதயத்தில் குடியிருப்பவராம், கருணை மாதாவாம், இதயத்தின் இமயமாம்.. இந்த வாக்கியங்கள அமைக்கிறதுக்குன்னே தனியா குழு அமைச்சிருப்பாங்க போல.

என்னதான் காக்கா பிடிக்கிறதுனாலும் அதுக்காக இப்படியா மனசாட்சியில்லாம புழுகுறது?? இவங்களுக்குள்ள, யார் பேனர் பெருசா இருக்குனு போட்டி வேற.. கொடும டா சாமி.

ஏதாவது அரசு அறிவிப்புங்குற பேர்ல, பேருக்கு ரெண்டு நாள் பேனர்கள அப்புறப்படுத்திட்டு மறுபடியும் வழக்கம்போல வச்சிட்றாங்க.

அட ஏதோ சந்தோசமான விஷேசம்னா கூட பரவாயில்ல.. எழவு வீட்டுக்கு முன்னாடி கண்ணீர் அஞ்சலி செலுத்துறோம்னு ஃப்ளக்ஸ் வைக்கிறாய்ங்க. அதுலயும் வழக்கம்போல போலீஸ் ஸ்டேசன் நோட்டீஸ் போர்ட்ல இருக்க மாதிரி “உம்“முனு (அப்ப கூட பந்தா குறையாம) போஸ் குடுத்துகிட்டு நிப்பானுக. என்னத்த சொல்றது??

இது மாதிரி பேனர்ங்க வைக்கிறதுல ஒரே ஒரு நல்ல விசயம் என்னனா.. சின்ன குழந்தைங்க சாப்பிடலனா, அதுல இருக்குற போட்டோவ எல்லாம் காட்டி “அதோ பாரு பூச்சாண்டி“னு பயமுறுத்தி சாப்பாடு ஊட்டிடலாம். வேற எந்த மண்ணாங்கட்டி ப்ரயோஜனமும் இல்ல.
.

Monday, 27 September 2010

அடப்பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா???


ராஜீ : ஹலோ
சிவா : என்ன செல்லம் பண்ணிகிட்டு இருக்க?
ராஜீ : ஃபோன வச்சு ரெண்டு நிமிசம் கூட ஆகல.. அதுக்குள்ளயா?
சிவா : உன் குரல் கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்குடா குட்டிமா..
ராஜீ : அடி வாங்கப் போற.
சிவா : எங்க.. அடி பாக்கலாம்..
ராஜீ : ----- (சிரிப்பு சத்தம்) இப்ப என்னதான் வேணும்?
சிவா : கொஞ்ச நேரம் பேசுப்பா ப்ளீஸ்ஸ்ஸ்
ராஜீ : மணி என்ன தெரியுமா?? நைட் 2 ஆகுது..
சிவா : அதுனால என்ன? என் செல்லத்துகூட நான் விடிய விடிய பேசுவேன்..
ராஜீ : ம்ம்ம்.. அப்புறம்??
சிவா : நீ தான் சொல்லனும்..
ராஜீ : என்ன சொல்லனும்?
சிவா : ஏதாவது சொல்லு..
ராஜீ : என்ன சொல்றது??
சிவா : ம்ம்.. அங்க என்ன ஸ்பெஷல்?
ராஜீ : ஒண்ணுமில்லடா.. எல்லாமே நார்மல் தான்.
சிவா : ம்ம்.. அப்புறம்..
ராஜீ : வேறென்ன??
சிவா : நீ தான் சொல்லணும்.
ராஜீ : தூக்கம் வரலயா?
சிவா : ஏன் உனக்கு வருதா?
ராஜீ : இல்லப்பா..
சிவா : பின்ன?
ராஜீ : சும்மா தான் கேட்டேன்..
சிவா : ம்ம்.. அப்புறம்??
ராஜீ : வேறென்ன??
சிவா : நாளைக்கு என்ன ஸ்பெஷல்??
ராஜீ : எப்பவும் போல தான்..
சிவா : ம்ம்..
ராஜீ : அப்புறம்??
சிவா : சொல்லு..
ராஜீ : என்ன சொல்லனும்?
சிவா : ஏதாவது சொல்லு..
.

அடப்பாவிகளா??? என்ன தாண்டா பேசுறீங்க?
எப்ப தாண்டா முடிப்பீங்க??
நீங்க நல்லா இருப்பீங்களா???
நாசமாப் போக..
நிம்மதியா தூங்க விட்டுத்தொலைங்களேண்டா..
.
இப்படிக்கு
லவ் பண்ணுவோருக்கு ரூம்மேட்டாக இருந்து அவதிப்படுவோர் சங்கம்.
.

Friday, 24 September 2010

உனக்கோர் செல்லப்பெயர்..காதல் மிளிர்ந்து
வெகுநாட்களாகியும்
ஏனோ உனை அழைக்கவில்லை
ஒரு செல்லப்பெயரிட்டு..

பலமுறை கேட்டும்
மழுப்பலே பதிலாக.
தேடிக்கொண்டிருக்கிறேன்
என்பதை மறைத்து.

எனக்கு என்றும்
உரிமையானதாய்..
என்னை மட்டும்
நினைவூட்டுவதாய்..
என்னுள்ளே துலாவலானேன்..
உனக்கோர் பெயரை.

தேர்ந்த தேடலுக்குப் பின்
தேர்வு செய்தேன்
என் தேவதை உன்
புதிய பெயர்தனை..

என்னுள்ளே
ஆசையாய் உச்சரித்து
அழகு பார்த்து
ஆவலாய் உனை நெருங்குகையில்..

உன் நண்பர் கூட்டத்தில்
எவனோ உனை அழைக்க..
உடைந்து போய் நின்றேன்.

என் தேடல் முடிவு
அவன் வார்த்தையில்.

நட்பின் உரிமையென்று
சமாதானித்துக் கொண்டாலும்..
ஏனோ தெரியவில்லை.
இன்று வரை அழைக்கிறேன்.
உன் முழுப்பெயரையே.
.

Tuesday, 21 September 2010

செம்மொழியான டமிழ் மொழியே....


அது ஒரு பன்னாட்டு நிறுவனம். தமிழகத்தின் தலைசிறந்த கம்பெனிகளில் அதுவும் ஒன்று. அதில் வேலைக்கு சேர்வது சாதாரண விஷயமில்லை. பட்டதாரிகளை திறமை, படிப்பு, ஒழுக்கம் என்று பல்வேறு கோணங்களில் தேர்வுகள் நடத்தி பொறுப்பான பதவிகளில் வேலைக்கு அமர்த்தியிருந்தனர்.

அத்தகைய நிறுவனத்தில் அன்று இறுதிக் கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு நபர்களும் தயாராக வந்திருந்தனர். சரியாக பத்து மணிக்கு இண்டர்வியு ஆரம்பிக்கும் என்று முன்னரே அறிவிக்கப்பட்டிருந்ததால் சில நிமிடங்கள் முன்னதாகவே வந்து அமர்ந்திருந்த அவர்கள், பலதரப்பட்ட தேர்வுகளில் தேர்ச்சிபெற்றவர்கள். சிபாரிசோ லஞ்சமோ அறவே ஏற்கப்படாது என்பது நிறுவனத்தின் கொள்கை. அது அவர்களின் திறமைக்கு சாதகமாக அமைந்திருந்தது.

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு பொதுஅறிவினை கிரகித்துக்கொண்டு வந்திருந்தனர். சகஐமான விசாரிப்புகள் இருந்தபோதிலும் உள்ளுக்குள் தங்கள் மீதிருந்த அலாதியான நம்பிக்கையால், வெற்றியைக் கைப்பற்றிக்கொள்ளும் எண்ணமும் மேலோங்கத் தவறவில்லை. படிப்பிற்குண்டானதும் விளையாட்டு மற்றும் இன்னபிற சான்றிதழ்களும் அள்ளிக்கொண்டு வந்திருந்தனர். இன் பண்ணப்பட்ட சட்டை, அயர்ன் பண்ணிய பேண்ட், அதன் பெல்ட், டை, ஷூ, இவைகளோடு சேர்ந்து அவர்களது பெர்ஃபியும் வாசனையும் அந்த அறையையே ஆக்கிரமித்தது.

சரியாக, சுவர்க்கடிகாரம் பத்துமுறை மணியெழுப்பிய மறுவினாடி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இயல்பான அறிமுகங்களுக்கும் சான்றிதழ் ஆய்வுகளும் நடைபெற்றபின் கேள்வி கேட்கப்பட்டது.

ஒரே ஒரு கேள்வி தான். ஆனால் சொல்லிவைத்தாற் போல ஆறு பேருக்குமே அதற்குண்டான விடை தெரியவில்லை. சிறப்பான முறையில், தங்களால் இயன்ற அளவிற்கு தயாராக வந்திருந்தபோதிலும், கேள்விக்குண்டான பதில் தெரியாததால் திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

கேள்வி :  அன்றைய தமிழ் வருடம், மாதம், தேதி என்ன?

 

தூரத்தில் எங்கோ ஒலித்துக்கொண்டிருந்தது..

செம்மொழியான தமிழ் மொழியேஏஏஏஏ......

.

Friday, 17 September 2010

நான் வாங்கிய பல்பு..நான் ஒரு தடவை தற்காலிகமா உள்ளுர் கேபிள் சேனலில், செய்தி வாசிப்பாளரா (நம்புங்கப்பா) கொஞ்ச நாள் வேலை பாத்துகிட்டிருந்தேன். அங்க அடிக்கடி மற்ற நிகழ்ச்சிகளுக்கு நேரடி ஒளிபரப்பு எல்லாம் நடக்கும். ஒரு தடவை கேம் ஷோ ஒன்னு நடத்துனாங்க. அதாவது, நிகழ்ச்சிக்கு போன் பண்றவங்க கிட்ட ஏதாவது கேள்வி, கேட்டு பதில் சொல்றவங்களுக்கு பரிசு அறிவிக்கணும்.
.
அந்த சேனல்ல செய்திகளையெல்லாம் கொஞ்சம் முன்னதாவே பதிவு பண்ணி ஒளிபரப்புவாங்க. அதுனால எனக்கும் நேரடி ஒளிபரப்புக்கும் தொடர்பில்ல.
.
அப்படிதான் ஒரு நாள் நா வேலைய முடிச்சுட்டு கௌம்பிகிட்டு இருந்தேன். திடீருனு எங்க மேனேஜர் என்கிட்ட ஓடி வந்து அன்னைக்கு லைவ் ஷோ பண்ற பொண்ணு வரலனும் வேற ஏற்பாடு பண்ண முடியாதனால நான் அந்த நிகழ்ச்சி பண்ணனும்னும் பதட்டமா சொன்னாரு. எனக்கு தூக்கிவாரிப்போட்டுச்சு. ஆனாலும் வேற வழியில்லாதனால சரின்னு சொன்னேன்.
.
உடனே அவசர அவசரமா லைட்டா மேக்அப் போட்டுகிட்டு (அழகுக்கு அழகா?) நிகழ்ச்சிக்கு தயாரானேன். புரோக்ராம் டைரக்டர் என்கிட்ட வந்து ”நீ என்ன பண்ணுவியோ தெரியாது, போன் பண்றவங்களுக்கு எத்தன க்ளு வேணும்னாலும் குடு, அவங்கள ஜெயிக்க வச்சிடனும், அப்பதான் புரோக்ராம் ஃபேமஸ் ஆகும்”னு பயமுறுத்திட்டுப் போனாரு.
.
ஒரு வழியா எல்லாம் தயாராகி 3, 2, 1 சொல்லி ஸ்டார்ட் சொன்னது தான் தாமதம்.. சாதாரணமா கையசைத்து Hello Viewers’னு ஸ்டைலா ஆரம்பிக்கிறதுக்கு பதிலா ஏதோ கோயில்ல சாமி கும்பிட்ற மாதிரி ரெண்டு கையெடுத்து கேமராவ கும்பிட்டு வணக்கம்னு சொன்னேன். அப்பவே மேனேஜருக்குப் புரிஞ்சிருக்கணும். அப்புறம் ஒரு மாதிரி சமாளிச்சு முதல் காலரை அட்டெண்ட் பண்ணேன். போன்ல ஸ்பீககர் போட்டு அதுக்கும் எனக்கும் தனித்தனியா மினி மைக் வச்சிருந்தாங்க. அத மறந்துட்டு ஏதோ வீட்ல பேசுற மாதிரி (கேமராவுக்கு என் உச்சந்தலையைக் காட்டியபடி குனிஞ்சு) ஸ்பீக்கருக்குப் பக்கத்துல முகத்தைக் கொண்டு போய் அவங்க கிட்ட பேசினேன். என் மேனேஜர் அவ்வளவு தான், அவரோட தலையில கைவச்சிட்டாரு. விட்டா என்னைய எரிச்சிட்றது போல அங்க இருந்த எல்லாரும் பாத்தாங்க. அப்புறம் எனக்கு ஞாபகம் வந்து அசடு வழிஞ்சுகிட்டே நேரா நின்னு சமாளிச்சுகிட்டேன்.
.
என்கிட்ட என்ன கேள்வி கேக்கணும்னு ஒரு பேப்பர்ல எழுதிக் குடுத்திருந்தாங்க. அதுபடி முதல் கேள்விய அவங்ககிட்ட கேட்டேன். “கிருஷ்ணக்கடவுளுக்கு இது மிகப்பிடிக்கும். புரதச்சத்து இதில் அதிகம்“. இது தான் அந்தக் கேள்வி. காலர் என்னய திட்னாங்களா இல்ல பதில் சொன்னாங்களானு தெரில, “வெண்ணை“னு சொன்னாங்க. சரியான பதில்னு சொல்லி சின்னப்புள்ளத்தனமா உணர்ச்சிவசப்பட்டு சத்தமா கைதட்டி சொதப்பினேன்.
.
ஒவ்வொருதடவ பேசி முடிச்சதும் ஒரு பாட்டு ஒளிபரப்பாகும். முதல் பாட்டு ஓடிமுடிக்கிறவரைக்கும் என்னோட மேனேஜர் என்ன நல்லா திட்டி தீத்துட்டார். பாட்டு முடிஞ்சதும் எதுவுமே நடக்காத மாதிரி சிரிச்சுகிட்டே (அவ்வ்வ்வ்) அடுத்த காலர்கிட்ட பேசினேன்.
.
அவங்க என்னடானா இது சன் டிவி தானேனு கேட்டுட்டு இல்லன்னு சொன்னதும் கட் பண்ணிட்டாங்க. அப்புறம் கால் எதுவும் வரல. நேரடி ஒளிபரப்பு வேற, என்ன பண்றதுனே தெரியாம ஒரு நிமிசம் சமாளிக்கிறதா நெனச்சு எதையெதையோ உளறினேன். யூனிட்ல இருந்தவங்களுக்கு நல்ல மனசுபோல.. பொறுத்துப் பொறுத்து பாத்துட்டு அவங்களே எனக்கு போன் பண்ணி யாரோ மாதிரி பேசினாங்க. ஆனா நான் தான் கேமராவ பாக்காம போன் பண்றவங்க முகத்தைப் பார்த்து பேசிட்டிருந்தேன். கேமராமேன் எனக்குப் புரியவைக்கிறதுக்குள்ள ஒரு பரதநாட்டியமே ஆடிட்டார். வழக்கம்போல கடமையேனு கேள்வி கேட்டு பாட்டு போட்டேன்.
.
இப்ப மேனேஜர் கிட்டத்தட்ட மயக்கம்போடாத குறை தான். அடுத்ததா ஒரு கால் வந்தது. ஒரு பெண் குரல் கேட்டுச்சு, நீங்க இந்திரா தான? நீங்க நல்லா செய்தி வாசிக்கிறீங்க மேடம், உச்சரிப்பெல்லாம் அருமையா இருக்கு அப்படி இப்படினு புகழ்ந்து தள்ளிட்டாங்க. எனக்கு ஒரே சந்தோசம். அவங்களுக்கும் ஒரு பாட்டு போட்டுட்டு ஒரு வழியா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. கால் பண்ணின எல்லாருக்கும் நன்றி, வேறொரு நிகழ்ச்சில சந்திக்கிறேன்னு ஈஈ“னு சிரிச்சுகிட்டே முடிச்சேன். கேமராவ ஆஃப் பண்ணிணப்புறம் தான் எல்லாருக்கும் உயிர் வந்தது.
.
பொறுமையா பாத்துகிட்டிருந்த மேனேஜர் என்கிட்ட வந்து ”இனிமே சாகுறவரைக்கும் உன்கிட்ட லைவ் ஷோ பண்ண சொல்லி கேட்க மாட்டேன்”னு சொல்லிட்டுப் போனாரு.

அதுக்கப்புறம் கொஞ்ச நாள் செய்தி வாசிப்பாளராவே வேலை பாத்தேன். அப்புறம் வேறொரு கணிணி அலுவலகத்துல சேந்துட்டேன்.
.
ஆனா அந்த நிகழ்ச்சிக்கு போன் பண்ணிப் பாராட்டிய காலர், என்னோட அம்மா தான்னு இன்னைக்கு வரைக்கும் அவர்கிட்ட சொல்லவேயில்ல.
.

Thursday, 16 September 2010

மன்னாதி மன்னன் - தொடர்பதிவு

நம்மளையும் மதிச்சு (!!!) தொடர்பதிவுக்கு கூப்பிட்ட வெறும்பயலுக்கு நன்றி.
இராஜராஜ சோழர், ஆசோகர், அலெக்சாண்டர், கட்டபொம்மன், இம்சை அரசன் 23ம் புலிகேசி (!!) இப்படி நெறைய மன்னாதி மன்னர்கள் இருந்தாலும், தலைப்பைப் படித்ததும் எனக்கு முதலில் தோன்றியது திப்பு சுல்தானின் நினைவு தான். இந்தியாவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து எவ்வளவு போராட்டங்கள் நடந்திருந்தாலும் அதற்கெல்லாம் முதலில் வித்திட்டது இவரது ஆட்சியில் தான்.


நான் எதற்காகவும் அஞ்சவில்லை, திப்பு சுல்தானைத் தவிரஎன்று ஒரு ஆங்கிலேய கவர்னர் சொன்னதாக எங்கோ படித்ததாக நினைவு. அவரைப் பற்றி நான் தெரிந்து கொண்ட தகவல்களை சுருக்கமாக எழுதியுள்ளேன்.
திப்பு சுல்தான் நவம்பர் 20, 1750ல் தேவனஹல்லியில் பிறந்தார். தந்தை ஹைதர் அலி, தாய் ஃபக்ர் உன்னிசா, இளைய சகோதரர் கரீம்.
இவரது தந்தை சாதாரண இளநிலை அதிகாரியாக இருந்து படிப்படியாக அரசரின் நம்பிக்கை மூலம் ஆட்சியை ஒப்படைக்கப்பெற்றவர். திப்பு சுல்தானை ஆரம்பத்தில் இறைபணிக்காக அர்பணிக்க எண்ணிய ஹைதர் அலி, பின் காலப்போக்கில் மனது மாறி வலிமையான அரசனாக உருவாக்கினார்.
திப்பு சுல்தானின் பதினைந்தாவது வயதில், பெத்னூருக்கு தெற்கே அமைந்த பாலம் (Balam) என்ற நகரில் நடைபெற்ற போரில், தந்தையின் போர் முறையை கற்றுக்கொள்வதற்காக, முதன் முதலில் போர்க்களத்தில் இறங்கி, பின் அதில் வெற்றி பெறக் காரணமாகவும் இருந்தார். அதற்காக தம் தந்தையின் உடைவாளினை பாராட்டாகவும் பெற்றார்.
டிசம்பர் 1782, தந்தையின் மரணத்திற்குப் பிறகு முழுமையான ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
வணிகம் செய்ய நுழைந்த ஆங்கிலேயர்களின் உள்நோக்கத்தை, தொலைநோக்குப் பார்வையால் அனுமானித்து அவர்களை எதிர்த்தார். இந்தக் காலகட்டத்தில் தான் புலியின் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி திப்பு சுல்தானின் படைக்கு வடிவமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் படைகளின் சிம்மசொப்பணமாக இருந்த திப்பு, ராக்கெட் செலுத்துவதில் சிறப்பான முறையைக் கையாண்டார்.
நம்பிக்கைக்குரிய ஷீக் ஆயாஸ் என்பவன், உள்ளிருந்து ஆங்கிலேயருக்கு வேலைசெய்த தந்திரத்தால் தான், ஏப்ரல் 28, 1783ல் திப்புவின் முக்கியப் பிரதேசமான அனந்தபூர் நகர் கிழக்கிந்திய அரசால் கைப்பற்றப்பட்டது. இதுதான் திப்புவிற்கு கிடைத்த முதல் அடி.
அமைதியை நிலவச் செய்வதே திப்பு சுல்தானின் மேலோங்கிய நோக்கமாக இருந்தது. எதிரிகளானாலும் அவர்களையும் மனிதநேயத்துடன் உள்நோக்கியவர். ஒரு முறை போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் காயமுற்றிருப்பதைப் பார்த்த திப்பு சுல்தான், தமது அரண்மனை மருத்துவர்களிடம் எதிரிப்படைகளுக்கும் கூடாரங்கள் அமைத்து மருத்துவ உதவி செய்ய ஆணையிட்டார்.
1983ல் திப்புவால் இயற்றப்பட்ட ஆணை இது.
எதிரிகளுடன் போரிடும்போது, அவர்களிடமிருந்து எதையும் நாம் அபகரிக்கக் கூடாது. சிறைப்படுத்தப்பட்டவர்களை துன்புறுத்தக் கூடாது. மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மீறினால் நம் ராணுவத்திற்கு கெட்ட பெயர்தான் கிடைக்கும்.
1792ல் ஒரு வழியாக நீண்டகால போராட்டத்திற்குப் பிறகு ஆங்கிலப் படைகளை விரட்டிவிட்டதாக எண்ணி மகிழ்ச்சியாக இருந்த சமயம், இரவோடு இரவாக எதிர்பாராத தருணத்தில் பெங்களுர் கோட்டையை கைப்பற்றினார் கார்ன்வாலிஸ் ஆளுநர். முதன் முறை அடி சறுக்கிய திப்பு, வேறு வழியின்றி போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதித்தார்.
பிப்ரவரி 26, 1792ல் ஸ்ரீரங்கப்பட்டிணம் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. ஈடாக ஆங்கில அரசு ஏராளமான பணமும் பிரதேசங்களையும் மட்டுமன்றி திப்புவின் எட்டு வயது அப்துல் காலிக், ஐந்து வயது முய்ஸ்-உத்-தீன் ஆகிய புதல்வர்களையும் பிணையமாக வாங்கிக் கொண்டு பின் இரண்டு வருடங்கள் கழித்து விடுவித்தனர்.
பின்னர் வரலாற்று நிகழ்வாக, புதிய கவர்னர் ஜெனரல் ரிச்சர்ட் வெல்லஸ்லி, திப்புவிற்கு எதிராக பிப்ரவரி 11, 1799ல் பெரும் படையைத் திரட்டி, பெரும்பாலான பிரதேசங்களைக் கைப்பற்றினார்.
இறுதியாக மே 4, 1799ல் ஸ்ரீரங்கப்பட்டிணத்தில் திப்புவின் கோட்டை முற்றுகையிடப்பட்டது.
மடிந்தவர்களையும் பிரிந்தவர்களையும் எண்ணி வருந்தாது, வாளை கையில் எடுத்து எதிரிப்படைகள் மீது பாய்ந்து, தனியாக நின்று, முடிந்தவரை போரிட்ட திப்பு சுல்தான், கடைசியில் தன் காதுப் பகுதியில் குண்டடி பட்டு, தான் கொன்று வீழ்த்திய எதிரிகளின் பிணக்குவியல் மீதே சரிந்து மடிந்தார்.
ஆங்கிலேய ஆட்சியை கடுமையாக எதிர்த்துப் போராடிய மாமன்னன் திப்பு சுல்தானின் வீர வரலாற்றில் எனக்குத் தெரிந்த தகவல்கள் இவை.
திப்பு சுல்தானைப் பற்றிய மற்றுமொரு தகவல் என்னவெனில், மூன்று முக்கிய துறைகளின் வளர்ச்சிக்கு அவர் வித்திட்டார்.
1. பட்டு உற்பத்தி
2. கடலிலிருந்து முத்து எடுக்கும் பணி
3. பிராணி வளர்ப்பு
இவை மூன்றும் மைசூரை செழிப்படைய வைத்தது பிற்கால சரித்திரம்.
.
.

Tuesday, 14 September 2010

நாளை கண்டிப்பாக...


புல் மீது விழும்
பூவின் மௌனமாய்
உன் மீதெழும் காதல்
என்னுள்ளாய்..
***
உனது துப்பட்டாவில் பட்டு
சிதறிச் செல்வது
காற்று மற்றுமல்ல
என் காதலும் தான்.
***
கிறுக்கல்கள் கூட
காவியமாய்..
உளறல்கள் கூட
ரகசியமாய்..
எனக்கான ஓருலகம்
ஓவியமாய்.
***
நீளும் என் இரவுகள்
விடியாமல் விழிப்புடன்..
நாளும் உன் நினைவுகள்
முடியாமல் தவிப்புடன்..
***
எத்தனையோ விழுப்புண்கள்
தாங்கிக்கொள்ள முடிந்தது
தாங்க முடியாமல்
தவிக்கிறேன்.
உன் விழி்ப்புண் பட்டதை..
***
எனைக் கடக்கும்
உன் பார்வைக்கு,
ஏற்றதொரு அர்த்தத்தை
எப்போதும் தருவதில்லை
எந்த ஒரு அகராதியும்..
***
கடலையும் நிலவையும்
புதிதாய் ரசிக்கக்
கற்றுக்கொடுத்த நீ
காதலைத் தெரிவிக்க
கற்பிக்கவில்லையே..
***
இதோ..
கொடுக்கப்படாத
உனக்கான என் கடிதங்கள்,
இன்றும் என் அலமாரியில்..
தயக்கங்கள் என்ற பெயரில்.
***
வழக்கம்போல்
சொல்லிக்கொண்டேன்.
“நாளை கண்டிப்பாக”.

***

Wednesday, 8 September 2010

கும்மியடிக்கும் பதிவர்களுக்கு..


நண்பர் வால்பையனின் சமீபத்திய பதிவு ஒன்றினைப் படித்தேன். அதில், பதிவுலகம் தற்போது வெகுவாக முன்னேறி வருவதாகவும், செய்தித்தாள்களில் இடம் பிடிக்கத் துவங்கிய வலைப்பதிவர்கள் தற்போது தொலைக்காட்சியையும் விட்டுவைக்கவில்லை என்றும், இது ஆரோக்கியமான விசயம் என்றும் அவர் கூறியிருந்தார்.


அவருடைய இந்தக் கருத்துக்களில் எந்த அளவு உண்மை இருக்கிறதோ, அதற்கு ஈடான வருந்தத்தக்க நடைமுறையும் நிலவுகிறது என்பதே எனது பார்வை. இன்றைய வலைப்பதிவாளர்களும் சரி, புதிதாக வலையுலகில் காலடி எடுத்து வைப்பவர்களும் சரி, பெரும்பாலானவர்கள் தங்களின் நகைச்சுவை உணர்வினை மற்றவர்களுடன் பகிரும் ஊடகமாகவே வலைப்பதிவினை நோக்குகின்றனர். பதிவுகள் போட்டாக வேண்டுமே என்பதற்காக, அன்றன்று தமக்கு நடைபெறும் நிகழ்வுகள், நகைச்சுவையாக மாறிய தருணங்கள், கிண்டல்கள், நையாண்டிகள், பரிகாசங்கள், குறிப்பிட்டவர்களுக்குள் நடைபெறும் கருத்துமோதல்களின் பிரதிபலிப்புகள், திரைப்பட விமர்சனங்கள், புகைப்படங்கள், அதிகம் போனால் சிறுகதைகள் மற்றும் காதல் கவிதைகள் என்று மிகச் சாதாரணமான பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பதிவுகளை இடுகின்றனர். கவலைவேண்டாம், இந்தப் பட்டியலில் என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்.
.

பொதுவாக ஒரு தொலைநோக்குப் பார்வை என்பது வலைப்பதிவர்களிடையே குறைந்து வருகிறது. பெருமைக்காகவும், தமக்கும் பதிவுகள் எழுதத் தெரியும் என்று சக நண்பர்களிடம் பீற்றிக்கொள்ளும் தலைக்கணமும் அன்றி இதற்கு வேறேதும் காரணங்கள் எனக்குப் புலப்படவில்லை.
.
பதிவுகளில் தான் இந்த லட்சணங்கள் என்றால் பின்னூட்டங்களில் இதற்கு மேல் கிண்டல்களும் கேலிகளும் ஆட்டம்போடுகின்றன. கடனே என்று, பதிவுகளை முழுதாகப் படிக்காமல் கூட பின்னூட்டமிடுவதும், ”உள்ளேன் ஐயா” என்பது போல் வருகைப் பதிவு செய்வதும் சகஜமாகிவிட்டது. பதிவில் உள்ள எழுத்துப் பிழைகளை எடுத்துச்சொல்லும் அளவிற்கு அதிலுள்ள தவறுகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுவதற்குப் (பெரும்பாலானவர்களுக்கு) பொறுமையில்லை.
.
சமுதாய நோக்கோடு பதிவுகளிடும் பல வலைப்பதிவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால் அவ்வாறான வலைகள், எண்ணிக்கைக்கு உள்ளடங்கியே இருக்கின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமன்றி பொதுப்படையான, உபயோகமான பதிவுகளும் வலையுலகில் வெளியாக வேண்டும் என்பது தான் எனது ஆதங்கம். என்னுடைய பதிவுகளிலும், நான் மேலே குறிப்பிட்ட குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனை மாற்றிக்கொள்ளும் முயற்சியாக இந்தப் பதிவினை இடுகிறேன்.
.
(வலைப்பு ஆரம்பிச்சு ரொம்ப நாளாகுது.. நாமளும் ஏதாவது மெசெஜ் சொல்லணும்ல..)

அடுத்த பதிவுல சந்திப்போம்..

.
Related Posts Plugin for WordPress, Blogger...