Tuesday, 25 May 2010

என் ஒரு தலைக் காதல்ஓடும் படகில்
துள்ளும் ஒற்றை மீனாய்
என் காதல்.

கதவிடுக்கின் விளிம்பில் கசியும்
குளிர்ந்த சாரலாய்
என் காதல்

சிதறும் உன் பார்வைக்கும்
சிலிர்க்கும் சிறு புன்னகைக்கும் ஏங்கும்
என் காதல்

நிஜம் தொடரும் நிழலாய்
நீங்காத தயக்கத்துடன்
என் காதல்

"காதலோ !!!" என்ற பிற கேலிக்குப்
பொய்யாக கோபப்பட்டு
ரகசியமாக சிரித்துகொள்ளும் ரசிகையாக
என் காதல்

முன்வந்தாலும் மூளையைச்
சுடும் நட்பெனும் போர்வையாய்
என் காதல்

நேசிக்கவோ நிராகரிக்கவோ படாத
வெளிப்படுத்தாத தருணமாய்
என் காதல்

நெடுங்கால அவஸ்த்தைக்குப் பின்
முடிவெடுத்து முன்வந்தது
என் காதல்

“நேசிக்கிறேன்”.
எனக்கு முந்திக்கொண்டு
எனைப்பார்த்து உச்சரித்தன உன் உதடுகள்.

கால்கள் தரையிருக்க
காற்றில் பறந்தேன்.

"ஆம்" என்றேன் தலை குனிந்து.
அணைத்துக்கொண்டாய் அருகில் வந்து.

காணாமல் போனது என் உலகம்
கண்டேன் புதியதாய் கண்முன்னே.

ஆனந்தப் பெருமூச்சில்..
உன்மீதான என் காதல்

Thursday, 20 May 2010

மனிதன் எனும் மிருகம்சில சமயங்களில் வார்த்தைகளை விட மௌனத்திற்கு அதிக வலிமை உண்டு.
அதுபோல சில நேரங்களில் எழுத்துக்களை விட புகைப்படங்கள் நம்மை அதிகமாக பாதிக்கின்றன.
இந்தப் பதிவில் உள்ள புகைப்படங்களும் அந்த வகையை சேர்ந்தவை தான்.
எட்டு வயது சிறுவன், சந்தையில் ஒரு ரொட்டித்துண்டை திருடிவிட்டான் என்பதற்காக அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை இது.மனிதத்தன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட ஒரு சம்பவம் இது.
ஒரே ஆறுதல்…

நம் நாட்டில் அல்ல, இது ஈரான் நாட்டில் நடந்த அரக்கத்தனம்.

மிருகங்கள் கூட நேசிக்கும் தன்மை கொண்டவை.
மனிதன் எனும் மிருகம் எப்போது இதை கற்றுக்கொள்ளப் போகிறான்?
இந்த புகைப்படங்கள் பாதிக்காத மனிதன் இருக்க முடியாது. உங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது தானே?

Monday, 17 May 2010

எதிலும் நீ இருந்தால்..உலகமே கைக்குள் அடங்கியதோ..!!
என் உள்ளங்கையில் உனது ரேகைகள்.

எனது தோள்கள் உன் காதுகளுடன்
ரகசியம் பேச வேண்டுமாம்..
சற்றே சாய்ந்து கொள்ளேன்.

நமக்குள் தூரம் கொடுமையடி..
உன் இதழ் தரும் ஈரம் வேண்டுமடி..

என்னைப்போல் உன்னிடத்தில் காதல் கொள்ள
எவனும் இல்லை.. எவனும் இல்லை..
என்னிடத்தில் உள்ள உன்னை ஈடு செய்ய
எதுவும் இல்லை.. எதுவும் இல்லை..

இனியொரு வரம் வேண்டாம்..
எப்போதும் நீ அருகில் இருந்தால்.
எதையும் செய்கிறேன்..
எதிலும் நீ இருந்தால்.

Saturday, 8 May 2010

கூட்டாஞ்சோறு

குழந்தைப் பருவத்துல கூட்டாஞ்சோறு விளையாடாதவங்களே இருக்க முடியாது.. சின்ன சின்ன விளையாட்டு சாமான் எடுத்துட்டு வந்து எல்லாரும் சேந்து அவங்களுக்கு தெரிஞ்சத சமைக்கிரோம்குற பேர்ல ஏதோ பண்ணி அத பெருமையா ஏதோ சாதிச்சுட்ட மாதிரி நெனச்சு சாப்டுவாங்க..
என்னோட சின்ன வயசுலயும் இந்த மாதிரி நெறைய வாலுத்தனம் எல்லாம் பண்ணிருக்கேன். அப்டி தான் ஒரு நாள் என்னோட பக்கத்து வீட்டுப் பட்டாளங்கள எல்லாம் கூப்டு மீட்டிங் போட்டோம். சமைச்சு விளையாடலாம்னு முடிவு பணினோம்.
முதல்ல என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சோம். ஆளாளுக்கு ஒன்னொன்னு சொன்னாங்க.. கடைசியா சர்க்கரை பொங்கல் செய்யலாம்னு முடிவு பணினோம். அதுக்கு எனென்ன வேணும்னு பட்டியல் போட்டோம். அரிசி, தண்ணி,சர்க்கரை, அடுப்பு பத்த வைக்க தீப்பெட்டி, அப்புறம் அடுப்பு மாதிரி செட் பண்றதுக்கு மூணு கல்லு, அடுப்பு எரிக்கிறதுக்கு பேப்பர் எல்லாம் கொண்டு வரலாம்னு பிளான் போட்டோம். முக்கியமான விஷயம், இதை எல்லாம் நாங்க வீட்டுக்கு தெரியாம கொண்டு வரணும்.. தெரிஞ்சா குடுக்க மாட்டங்க. அதனால பூனை மாதிரி நடந்து போய் அவங்கவங்க சமையலறைல எடுத்துகிட்டு ஓடி வந்துட்டோம். இந்த பட்ஜெட் பட்டியல்ல எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு சர்க்கரை கொண்டு வர்றது. நானும் ஒரு சின்ன பேப்பர்ல அம்மாவுக்கு தெரியாம கொண்டு வந்துட்டேன்.எல்லாம் கொண்டு வந்தாச்சு, சமையல் ஆரம்பிக்கலாம்னு சொன்னதும் எங்களுக்குள்ள ஒரு இனம் புரியாத சந்தோஷம் வந்திடுச்சு.. வீட்டுக்கு பின்னாடி ஒரு மரத்தடியில சமையல ஸ்டார்ட் பண்ணலாம்னு ஆரம்பிச்சோம். ரொம்ம்ம்மம்ப ஆர்வமா எல்லாத்தையும் தனித்தனியா எடுத்து வச்சுக்கிட்டு, மூணு கல்லையும் அடுப்பு மாதிரி செட் பணினோம். இதுல என்ன ஒரு சோதனைனா எல்லா பொருளும் கொண்டு வந்தாச்சு, ஆனா சமைக்கிறதுக்கு பாத்திரம் கொண்டு வர மறந்துட்டோம். அப்ப தான் நா அதிரடி நடவடிக்கையா எங்க வீட்டு மாடிப் படிக்கு அடியில ஒரு கொட்டங்குச்சிய தேடிப் பிடிச்சு எடுத்துட்டு வந்து இதுல சமைக்கலாம்னு ஐடியா கொடுத்தேன். மத்த எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். சரின்னு சமையல் ஸ்டார்ட் பணினோம். கல்லு மேல கொட்டாங்குச்சிய வச்சு அதுல தண்ணி ஊத்தினோம், அப்புறம் அரிசிய போட்டு ஒரு குச்சிய வச்சு கிண்டி விட்டு அடுப்புக்கு அடியில பேப்பரல்லாம் வச்சு நெருப்பு வச்சோம். நாங்க மொத்தம் ஆறு பேர் (எங்களுக்கு பயம்னா என்னனே தெரியாது). ஒருத்தர் கிண்டிவிடனும், ஒருத்தர் பேப்பர் எரிக்கணும், ஒருத்தர் சர்க்கரை போடணும், ஒருத்தர் இதை எல்லாம் சரியா பண்றாங்களான்னு பாக்கணும். மீதம் இருந்த ரெண்டு பேர் வேடிக்கை பாக்கனும்னு வேலைய சமமா(!!) பிரிச்சுகிட்டோம். பெரிய்ய சாதனை பண்றது மாதிரி முகத்த பெருமையா வச்சுகிட்டு சுவாரஸ்யமா சமச்சுகிட்டு இருந்தோம்..

எல்லாமே நல்லா தான் போய்கிட்டு இருந்தது.. திடீர்னு பாத்தா அந்த கொட்டாங்குச்சி தீப்பிடிச்சு எரிய ஆரம்பிச்சுடுச்சு.. கொட்டாங்குச்சிய தீ எரிக்க யூஸ் பண்ணுவாங்கனு எங்களுக்கு அப்ப தான் ஞாபகம் வந்தது. அது மளமளன்னு எரிய ஆரம்பிக்கவும் எல்லாரும் பயந்து போய் கத்திகிட்டே நாலு பக்கமும் தெறிச்சு ஓட ஆரம்பிச்சோம்.
இதுல என்ன கமெடினா, பொங்கலுக்கு (!!!) போட்டுட்டு மிச்ச சர்க்கரைய பக்கத்துல வச்சிருந்தேன். பயந்து ஓடி வந்ததுல அத எடுக்காம வந்துட்டேன். அத விடக்கூடாதுன்னு மறுபடியும் அங்க போய் தேடினேன்.. ஆனா பயபுள்ளைக அத யாரோ தூக்கிட்டு ஓடிருச்சுக. (அது யார்னு இன்னைக்கு வரைக்கும் கண்டு பிடிக்க முடியலங்க). அதுக்கப்புறம் நாங்க யாருமே கூட்டாஞ்சோறு பத்தி பேசவே இல்ல.

இப்ப கூட சர்க்கரை பொங்கல பாத்தா, நாங்க பயந்து ஓடினது தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது.

Related Posts Plugin for WordPress, Blogger...